- இலக்கியப்புண்
இலக்கியப்புண் சீழ்ப்பிடித்து
நாற்றம் எடுக்கிறது.
அதிலிருந்து எட்டிப்பார்க்கிறது
இலக்கியப்பீடங்களின்
முட்டைகள் பொறித்த
அதிகாரக்குஞ்சுகள்
செம்மொழியின் கொரொனா தொற்று
கைகழுவி கழுவி
துடைத்துக் கொள்கிறேன்.
முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.
மூச்சு முட்டுகிறது.
சுவாசிக்க முடியவில்லை.
கனவிலிருந்து விழிக்கும்போது
எம் குடிசைகளில்
அச்சமின்றி விளையாடிக் கோண்டிருக்கும்
குழந்தைகளிடம்
கவிதையின் சாயல்.
கொரொனாவாவது மயிராவது!
முகக்கவசத்தை எடுத்து தூர வீசிவிட்டு
அச்சமின்றி சுவாசிக்கிறேன்.
ஹஹா…
காற்று உனக்கானது மட்டுமல்ல..
ரத்தம் வடியும் காயத்தில்
என் ஆத்தாக்கிழவி
காளியாத்தா
எச்சில் துப்பி
தெருப்புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.
பீடங்கள் சரிகின்றன.
டண் டணக்கா..
டணக்க்கு டக்கா.
டண் டணக்க்கா..
இனி என்ன…!?
இலக்கியச் சிறைவெளி உடைகிறது.
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே
டண் டணக்கா
டணக்கு டக்கா.
டண் டணக்கா..
ஹேஹே
டண் டணக்கா..
காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.
- எச்சில் பருக்கை
எப்போதும் கிடைத்துவிடுவதில்லை
என் இருத்தலுக்கான உணவு.
எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறாய்
நான் ஒதுக்கி வைத்திருக்கும்
எச்சில் பருக்கைகளை .
வேட்டைநாயின் வேகத்துடன்
என்னைக் கவ்வி
இழுக்கும் உன் கோரப்பற்களில்
யுகங்களின் ரத்தக்கறைகள் படிந்திருக்கின்றன.
எங்கிருந்து வருகிறது இந்த வெறி.?
முகத்தில் கீறும் நகங்களை
முத்தங்களால் தடவும் நீ
கடித்துக்குதறி சிதைக்கும் கண்களை
தெருவில் வீசுகிறாய்.
வேட்டை நாய்களின் எச்சிலைத் தின்ன
தெரு நாய்கள் சண்டை போடுகின்றன.
சன்னல் திரைகளை
ஒதுக்கிக்கொண்டு
குடும்ப பெண்கள் பயத்துடன்
எட்டிப் பார்க்கிறார்கள்.
வேட்டையின் வெற்றியில்
இரவுமிருகம் இளைப்பாறுகிறது.
நான் அடுத்த நாளுக்கான
நம்பிக்கையுடன்
உன் எச்சில்தட்டிலிருக்கும்
அமுதத்தை நக்கிக் கொண்டு.
- தவ்வை
தவ்வையை விரட்டியவன் யாரிங்கே?
ஆதித்தாயை மூத்தவளை
வற்றாத முலைப்பாலை
கருவறையின் பிசுபிசுப்பை
மூதேவியென தெற்கு மூலையில்
கிடத்தியவன் யார்?
வடதிசை வாடைக்காற்று
அறியாத ரகசியமா இது?
இமயத்தில் இருக்கும் இறுமாப்பா!
இறங்குடா..
பச்சைக்கிளி பறந்துவருவதற்குள்
படையலைப் போடு.
யட்சியின் பசி அடங்கட்டும்.
பச்சையம்மா பாய்விரித்த அடர்வனம்.
காத்திருக்கிறது
பயமில்லை.
தவ்வை அறியாத சிங்கத்தின்
பிடரிகளா!
கவிதைகள் வாசித்த குரல் : புதியமாதவி
Listen On Spotify :