- சிவாலயத்து அந்தியின் ஒளி.
கோபுரத்தின் நிழல்
குளத்தில் அசைகிறது.
வெண்கல
மணியோசைக்கு
விரைகின்றன பறவைகள்
மேற்கு நோக்கி.
ஆடுகளை
மேய்த்துத் திரும்பும் ஒருத்தி
குளிக்க ஆயத்தமானதில்
நீரின் அலைவிற்கு
ஒருவனது மனதின் நடு முள்
நடு
நடுங்குகிறது.
உச்சத்து
மின் விளக்குச் சிவப்பில்
சிவ
சிவ.
- கருவறை.
மெழுகுவர்த்தி
சுடர்வதில் தெரிகிறது
அறையின் மூலையில்
எரிந்தணைந்து
நெளிந்த
ஒரு தீக்குச்சி.
அதைப்போலவே
குறுகிப்படுத்து
உறங்க முயல்கிறேன்.
அவ்வளவுதான்
இடமிருக்கிறது.
மேலும்
அப்படி படுத்திருந்தும்
பழக்கம்.
கவிதைகள் வாசித்த குரல் : கலை சாய் அருண்
Listen On Spotify :