1. கயமுனி
கருத்த விழுவையாய்
உயர்ந்தோங்கி நிற்குமோர்
அகங்காரப் பெருமா
டெஸ்டோஸ்டிரோனின் அதிசுரப்பில்
கண்களின் மேல் மதநீர் சுரக்க
கரிணிகள் பல புணர்ந்தடங்கா வல்விலங்கு
ஐந்து கால் யானையென
கால்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறதென
ஆச்சரியமடையும் பிஞ்சுபிழிகளை
இறுகப் பற்றியபடி
அதிர்ந்தன பெண் பாகங்கள்
அகவொளி அணைய
சுயவட்டத்திற்குள்
புழுதி சூழ
ஆகிருதித் திமிரை உலுக்கி
அண்டம் வென்ற மிதப்புப் பிளிறலால்
அடைபடும் சிறுவழிப்பாதை
அசுர சாயலொத்த
வெண்ணெயிற்றில்
குருதி ஓலங்கள்
கறையடியில் நசுக்கப்படும்
அதன் மேல் உதிர்ந்த மலர்கள்
கிளைகளை ஒடித்துண்டு
மரத்தை முட்டித் தள்ளும்
அடங்காப்பசி கொண்ட களிற்றை
புலன்கள் மயக்கி
தனித்து விட்டு
சிகிச்சை அளிக்கலாம்
அல்லேல்
வழி தவறி ஆழ்குழியில்
விழுந்து மரணிக்கலாம்
மூர்க்கமாகி சண்டையிட்டு
அதன் இனத்தாலே கொல்லப்படலாம்
பெரும் கருணையிருப்பின்
மேதாவிலாச ஆணவத்தால்
புடைத்த நெற்றி மேடுகள்
சுக்கு நூறாகி
ஆக்ஞை ஒளியால்
கயமுனி ஆகலாமென
நட்சத்திரங்கள் உரையாடின
2. ஏணியின் கால்கள்
சவப்பெட்டி தயாரிப்பவனை அழைத்து
ஏணியை
செப்பனிடச் சொல்ல வேண்டும்
ஏனெனில்
பிணத்தை சிறப்புற புதைக்க வல்லவனே
அதன் கனவுகளை
வேறொரு மரப்பலகை கொண்டு மூடி
ஆணியறைந்து
நன்றாய்க் கட்டுவான்
மேலேறிச் செல்லும் உத்தேசத்துடன்
முதலடி எடுத்து வைக்கும் முன்
கைகளால் அசைத்துப் பார்த்து
உறுதி செய்து விட்டு
ஏறத்துவங்குவது நல்லது
பாதங்களில் ஆணிகள் குத்தாமல்
பத்திரமாக
பார்த்துக் கொள்வது உசிதம்
ஒரேயொரு வேண்டுகோள்
ஒருபோதும் அதை அன்பால்
வருடிக்கொடுத்துவிட வேண்டாம்
ஏணியின் கால்கள்
கொஞ்சம் அசைகின்றன.
3. சந்திரப்பிரபை
எப்போதும் போல்
பழுதான விதையேன தூக்கி எறிந்தது
மறுபடியும்
இதயத்தில் விழுந்திட
காட்டு மூங்கிலென
சொற்ப காலத்தில்
அசுர வளர்ச்சி கண்டு
ரத்த அணுக்களில்
காதலை இசைத்து அனுப்பிட
இசைக்கருவியாகிறேன்
கொலுசுகள் தந்திகளென ஒலித்திடும்
உன் நேசத்தின் ஈரத்தில்
நிலவானது மெட்டி
அப்போது
நம் அறையில்
இரண்டு பௌர்ணமிகள்
நீயற்ற இருமை பூசிய நாட்களில்
ஒன்றினை
உன் திசையிலும்
மற்றொன்றை
தலைக்கு மேலும் வீசினேன்
கருமேகத்திடை ஒளிந்து கொள்கிறது நிலா.
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen On Spotify :
சிறப்பு வாழ்த்துகள் …