cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

தனிமை – கசப்பு – நோய்மை – துயரம் – தியானம்


1

இரவை உண்ண
வெளியே சற்று நடந்தேன்

என்னைக் கண்டதும் பரிச்சயமாய் கண்களைச் சிமிட்டுகின்றன
தூங்காமல் விழித்திருந்த
தூங்குமூஞ்சி மரங்கள்

ஒருவொருக்கொருவர் நாங்கள் அறிந்தவர்கள்
தினசரி பார்ப்பவர்கள்

குளிகைகளை கொடுத்தேன் தாலாட்டு பாடினேன்
கூட்டமாய் இருக்கிறதல்லவா தூங்கவில்லை
குழந்தைகள் அடம்பிடிக்கின்றன

கூட்டமாய் இருந்தாலும்
ஒவ்வொருவரும்
தனித்தனி.
ஒவ்வொருவரும்
தனிமையில்.

வேலையற்ற வேலைதான்
என்றாலும் நான்

ஒவ்வொரு இலையாய் தூங்க வைக்கிறேன்..

2

அறியாமல் எனக்கான இனிப்பை உள்ளே விழுங்கிவிட்டேன்

அது பொறுக்கவில்லை
கூட ஒரு கூட்டம் எறும்புகளும் உள்ளே இறங்கிவிட்டது..

கடித்து கடித்து உள் புண்ணாகி
புண்ணில் முட்டையிட்டு
ஒன்று இரண்டாகி
பல்கிபெருகிவிட்டது

இப்போது
கசப்பின் புற்று உயர்ந்திருக்கிறது.
நான் பால் வார்த்துக்கொண்டிருக்கிறேன்.

3

கொஞ்சம் மாத்திரைகள்…

நான் உயரமாகிக்கொண்டேயிருக்கிறேன்.
என் எடை கூடிக்கொண்டேபோகிறது

இன்னும் கொஞ்சம் மாத்திரைகள்…

எனக்குள்ளே சின்ன சிசுவாய்
கைகள் சுருட்டி கால்கள் மடக்கி சுருண்டு
என்னையே உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன்.

மூளைக்கு ஒரு மாத்திரை
மொழி பயந்துபோனது

இதயத்துக்கு இரண்டு மாத்திரை
கண்ணீர் பயந்துபோனது

முதுகுக்கு மூன்று மாத்திரை
அசைவுகள் பயந்து போனது

வயற்றுக்கு மூன்று மாத்திரை
அடுக்குகள் பயந்துபோனது

ஊடுருவி பார்க்காதீர் சகாக்களே
முன்பு நான்
அப்பட்டமாய் தெரிந்திருந்தேன்
நோயின்மையொரு ரசம் போன கண்ணாடி

நான் உள்ளிருந்து ரசம் பூசுகிறேன்
இனி நான்
யாவற்றையும் பிரதிபலிப்பேன்
நோய்மையொரு புத்தம்புது கண்ணாடி

4

நெடுநாட்கள் கவிதைகள் எழுதாமலிருந்த
கவிஞனைப் பார்க்க நண்பர்கள் வந்திருந்தனர்

கவிஞன் அழுதுகொண்டிருந்தான்
அவன் எதையோ கண்டுகொண்டிருந்தான்

“கவிதை நாள்பட்ட நோய்
வெட்டத்தின் நடுவேயுள்ள கறுப்பு
எக்கணத்திலும் அறுபோடப்போகும் வால்
கீறிய நெஞ்சின் மிளகாய்க் காந்தல்
கவிதையென்பது வலிந்து ஏற்றும் கழுமரம்
சாத்தான்கள் சுமக்கும் சிலுவை
பீயில் பொறுக்கியெடுத்த தானியம்”
எதை எதையோ புலம்பினான்
கவிதை அவனை கைவிட்டிருந்தது
அழுதான்

ஆறுதலின் சொற்கள் நண்பர்களின் பையில் இல்லை
ஈடாய் வாங்கி வந்த பழங்களை
கட்டிலின் ஓரத்தில் வைத்து கிளம்புகையில்

“கடவுள் நம்பிக்கை வந்துவிடுமோன்னு பயமாயிருக்கு”
கூடுதலாக அழுதான்

கவிஞனை கவிதையே
கைவிடுவது எத்தனை துயரம்

 

5

மனம் ஒரு குரங்கு -தெரியும்
உடல் ஒரு மரம்- தெரியாது

உடலில் மனம் ஏறி விளையாடுகிறது
உடலில் மனம் தாவி ஏறுகிறது
உடலைப் போட்டு குலுக்குகிறது
உடலின் கனிகளை பறிக்கிறது
வாரித் தின்கிறது
தூர வீசுகிறது

உடல் வாகாய் நின்று கொடுக்கிறது
உடல் சம்மதிக்கிறது
உடல் அனுமதிக்கிறது
ஏற்றுக்கொள்கிறது

உடல் அசையாமல் நிற்கிறது
மனம் ஆட்டம் போடுகிறது
மனம் அசையாமல் அமர்கிறது
உடல் ஆட்டம் போடுகிறது

உடல் அமைதியில் திளைக்கிறது
மனம் அமைதியில் திளைக்கிறது

மரமெங்கும் மனமெங்கும்
ஒரு ஓடை மெல்ல ஓடுகிறது

அதன் மெல்லிய சப்தம் கேட்கிறது
மனத்துக்கும் உடலுக்கும்

ஒரு ஓடை மெல்ல ஓடுகிறது

அதன் மெல்லிய சப்தம் கேட்கிறது
உடலுக்கும் மனத்துக்கும்


கவிதைகள் வாசித்த குரல் : உலகநாதன்

Listen On Spotify : 

About the author

சிவசங்கர் எஸ்.ஜே

சிவசங்கர் எஸ்.ஜே

எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.

இவரது நூல்கள்:

கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012)
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017)
யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019)
இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121)
அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022)
.. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022)
பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022)

( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Selvatharan

தன்னை நெய்து ஆடை செய்த கவிதைகள் கண்கள் பனிக்கின்றன.
நோய்மையில் கடவுளிடமிருந்து கவிஞன் தப்பிவிட்டார் கூடவே அவரது கவிதைகளும்.
நானோ நோய்க்குக் தப்பி கடவுளின் காலடியில். வெற்றியா தோல்வியா விளங்கவில்லை ஒன்றும்.

You cannot copy content of this Website