- பகை
முன்பு உறவாயிருந்த
அண்டை
வீட்டுக் குழந்தையை
தொலைவிலேயே
கவனித்து விட்டேன்…
என் கையால் உண்டு உறங்கி வளர்ந்தது…
பகை அதற்கு பரிச்சயமில்லை…
மெதுவாய்…
மிக மெதுவாய்…
மதிய வெயில் மர நிழலைப் போல
எத்தனை
தயங்கித் தயங்கி நகர்ந்தும்
அதன் கூப்பிடு தூரத்துக்கு
வந்து விட்டேன்..
அத்தை…
அத்தை…
மின்விசிறி இருக்கிற உள்ளறையினுள்
கூடு கட்ட இடம் தேடி வந்த
இரண்டு சிட்டுக் குருவிகளை போல
என் செவிப்பறைக்குள்
சுற்றிச் சுற்றி
பரிதவித்த
அந்த
பிள்ளை விளிசொற்களை நெடுநேரம்
துரத்திக் கொண்டேயிருந்தேன்!
- தப்பரும்பு!
என் உடலில்
உனை ஈர்க்கிற பகுதியென்று எதுவுமில்லை
நீ பொருத்திப் பார்த்த
பிம்பத்திற்குள் நான்
தொளதொளத்துக் கிடந்தேன்
உச்சத்தில் நீ உளறிய
பெயர் என்னுடையது இல்லை
ஒவ்வொருமுறையும்
உன் போகம் முடிந்த பின்பு தான்
நான் முகையவிழ
தொடங்கியிருப்பேன்
உன் நிர்வாண உடல்
எனக்கெந்தக் கிளர்ச்சியும்
தரவில்லை என்பாய்
அதுவே நம் தர்க்கங்களின்
கடைசி வாக்கியமாக இருக்கும்!
இப்போது என் வாழ்வில்
நீ இல்லை என்றான பின்பும்
என்னை நானே மலர்த்திக்கொள்கின்ற
என்றாவது ஒருநாளில்
மன அடுக்குகளிலிருந்து
உன் முகம் தேடி எடுப்பேன்
அப்போது
என் நிர்வாணம் ஒரு சுவாலையைப்போல
திசையெங்கும் ஒளிர
இதழிதழாய் மலர்வேன்
நானுன் விழி நழுவிய தப்பரும்பு!
நூல் விபரம் : தப்பரும்பு
ஆசிரியர் : ப்ரிம்யா க்ராஸ்வின்
பதிப்பகம் : வாசகசாலை.
விலை -ரூ 150/-
நூலைப் பெற : தொடர்புக்கு – 99628 14443
கவிதைகள் வாசித்த குரல் : கலை. சாய் அருண்
Listen On Spotify :