- அடுக்குகள் சரியும்போது..
நினைவுகளின் கடும் இருளைத் தாண்டி போய்விட
ஒரு பாதையை வனைகிறது
சுவரில் எப்போதோ நீ கிறுக்கிய பட்டாம்பூச்சி
இருவருமே சிறைப்பட்டு கிடக்கிறோம்
அநாதரவாக
மனச்சுவர் தடித்துகொண்டே நீள்கிறது
இடித்து தகர்த்திட
நிலவறையில் இறங்கி சொற்களைத் துழாவுகிறேன்
அங்கும் இருள் எங்கும் இருள்
மட்கிய வாசம் முழுவதும் இரக்கமேயில்லாமல் நீயே
நிரம்பிக் கிடக்கிறாய்
உடலில் படர்கின்ற பசலையைச் சுரண்டுகிறேன்
எங்கிருந்தோ அழைக்கிறது
துயரம் ததும்பும்
ஓர் இசை
கால் விரல்களில் மகரந்தம் சுமந்து வெளியேறிட
ஒரே ஒரு வானம் வேண்டுகிறேன்
பிறகுதான் உருவாக்குவேன்
நீயற்ற
ஒரு பெருங்காட்டை
- எதுவாகவேணும் இருந்திருக்கலாம்
காமத்தின் ஊற்றுக்கண்ணை உற்று நோக்குகிறாய்
காதல் உகுத்து திளைத்திட
ஓர் இடைவெளி வேண்டும்
இந்தச் சுவற்றிலிருந்து மறுபக்க சுவரின் மீது
நகர்ந்து போகின்ற வெயிலின் நிறம்
பயணம் தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலும் மாறி போகிறது
இரவென உறைகின்ற குளிரில் ஒளிர்கிறது எனது மௌனம்
சில்லிட்ட நாவின் நுனி ஊர்ந்து அலைந்த ரகசியத்தை
எதிலும் பதுக்கிக்கொள்ள திட்டமில்லை
கண் திறவா பாவனையில் முகிழ்கின்ற தொடுத்தலில்
எய்யப்பட்ட உணர்வின் கூர்மையாகி
என்னைத் தைத்துக்கொண்டேன்
எதிலோ
வைகறைக்கு முன்பாக மொக்குடைந்து
பகரும் மலர்தலை ருசித்திட
அனுமதியில்லை
போ அப்பால்
மாயமாகு
- நேர்க்கோட்டின் வளைவில்..
இருக்கிறேன் சுய நசிவின் திரள் என
வட்ட வடிவுகொண்டு வளிமண்டல வெளியில்
ஓர் இயக்கமாக
நீ புளுகும் பொய்களுக்கு இறகுகள் முளைத்து
பறவைகளாகும் தகுதியை
எனது சூரியனை வீசி நிராகரிக்கிறேன்
என்னை மீச்சிறு அளவில் கொஞ்சமாகத் தொகுத்து தந்திருப்பதில்
விடுபட்ட உணர்வின் தருணங்கள் எல்லாம்
ஞாபகத்தில் உள்ளனவா
இனி கட்டி எழுப்பலாம் அத்தனை கதைகளையும்
விடையற்ற கேள்விகளின் கொக்கிகளை
ஒவ்வொன்றாகக் கோர்த்து
உனக்கும் எனக்கும் நடுவில் நீர்த்துக் கிடந்தது
தனித்த இரவின் அடர்ந்த கம்பளம்
பின்னோக்கி நடந்து நடந்தே அடைந்துவிடலாம்
நமக்கான ஆகாயத்தை என்பது ஏற்பாடு
கரும்பள்ளத்தின் சுழற்சிக்குள் நுழையும் வரையில்
காத்திரு
அதில் இல்லை வெளியேற்றம்
இனி
எவ்வெப்போதும்
- கடல் சூழாத தீவுகள்
முகத்தின் குறுக்கே நீந்துகிறது மீன்
நுரை பொங்கிடும் மௌனத்தால்
கடலென பெருகுகிறது
மனம்
நீந்தி கடந்திட
உப்புக்காற்றை ஊதுகிறேன்
செதில் செதிலாகக் கசியும் உயிரின் சுவையில்
குமிழ் விடுகிறது பிறவி
திக்கற்ற நட்சத்திரக் கூட்டம் ஒழுங்கீனத்தோடு
உருவாக்குகின்றன வாழ்வை
சூரியன் வருவதும் போவதுமான வேடிக்கைத்தான்
முற்றுப்புள்ளியை தள்ளிப்போடுகின்றன
நீந்தும் மீன்களுக்கு குறுக்கு எது
முகம் ஏது
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen On Spotify :