மேகங்களினூடே நடனமாடியபடியே
பறந்து செல்கிறாள் அவள்
போகுமிடமெல்லாம் பின்தொடர்கிறாள்..
காற்றாய்
கவிதையாய்
பனியாய்
ஒளியாய்..
சமயங்களில் …
மலைகளினூடே மறைந்து விளையாடுகிறாள்..
அன்றொரு நாள்
கடற்கரையில் கால்நனைக்கையில்
குளிர்தென்றலென வருடிச் செல்கிறாள்
தனது இருப்பை உணர்த்தியவண்ணம்..
வெப்பம் தகிக்கும் ஒரு மதியத்தில்
மழையாய் பொழிந்து
மனதெல்லாம் நிறைகிறாள்
தொட்டுவிடும் தூரமென
மழைதுளி வழியாக எட்டிப்பிடிக்க முயன்றேன்
அதோ மேகங்களுக்கிடையே
நடனமாடியபடியே..
மறைகிறாள் அவள்!
நினைவில் வீடுள்ள ஆமைகள்
தங்கள் வீட்டைச் சுமந்தே திரிகின்றன…
எதிர்பாரா எதிரியிடமிருந்து
தப்புவதற்கும்
பிடிக்காதவர்களைக் கண்டால்
மறைந்து கொள்ளவும்
நிம்மதியாய் உறங்கி
தன்னை மறப்பதற்கும்
தன்னைப் பாதுகாக்கும் ஒரே அரண்
என்ற நம்பிக்கையிலும்
வீட்டை விட்டு விட்டால்
அது ஒன்றுமில்லாமல்
போய்விடக்கூடும் என்ற அச்சத்திலும்…
தன் வீட்டை சுமந்து கொண்டே அலைகின்றன..
தனக்காக தான் வீடு
வீட்டிற்காக தான் இல்லை
என அறியாத அப்படியான ஆமைகளை
குளத்திலும், கடலிலும்,
காட்டிலும், மேட்டிலும் ,கிணற்றிலும்
எல்லா இடங்களிலும் காணலாம்…
நினைவிலும் நிஜத்திலும்
தன் வீட்டை சுமந்தே திரிகின்றன..
அந்த அப்பாவி ஆமைகள்..
கவிதைகள் வாசித்த குரல் : ராணி கணேஷ்
Listen On Spotify :
அருமை