- அம்மாவை மாற்றிய ஆன்ட்ராய்டு
அம்மாவை இத்தனை சிரிப்போடு
இதற்குமுன் பார்த்ததில்லை
தன்னை அழகுப்படுத்திக் கொள்கிறாள்
அடிக்கடி செல்பி எடுத்துக்கொள்கிறாள்
முன்பு சலித்தபடியே சிடுமுகமாய் சமையல் செய்தவள்
இப்போது இசையைக்கேட்டபடி யாவருக்கும்
புன்னகையைப் பரிமாறுகிறாள்
ஆன்ட்ராய்டு வந்தபின் மாறிய அம்மா
நிறையவே மிளிர்கிறாள்
முகநூல் இன்ஸ்டாகிராம் என பரபரப்பாக இயங்குகிறாள்
தனது நிழற்படத்தை
தான் சமைத்ததைப் பதிவேற்றி
கருத்துகளில் சிலிர்க்கிறாள்
நண்பர்களின் பாராட்டுகளை
குடும்பத்திடம் காட்டி
பெருமையில் மிதக்கிறாள்
இதுநாள் வரை அவள் சலித்துக்கொண்டதெல்லாம்
அப்பாராட்டு வார்த்தைகள் ஏதுமற்ற
அந்த வெறுமையின் விரக்திதான்
எனும் குற்றவுணர்வில் மீள
எங்களுக்குத்தான்
இன்னும் சிலகாலங்கள் ஆகும்…
- இந்த நாளைத் தொடங்க ஒர் ஹாய் போதும்…
ஒவ்வொரு விடியலிலும் கண்விழித்து
தொடங்கும் போதெல்லாம்
எதுவுமற்று யாருமற்று வாழும்
தனிமையின் சலனம் மனதில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது
தெரிந்த வாட்சப் எண்கள் கூட
குட்மானிங் எதுமற்று
வெறுமையாய் கிடக்க
யாரையாவது அழைத்துப் பேசலாமா
செய்தி இடலாமா என நினைக்கையில்
முன்னம் கிடைத்த நிராகரிப்பின் அவமரியாதை
கண்முன் வந்துபோனது
சரியெனத் தெரியாத முகநூலில்
ஏதும் செய்திகளைத் தேடுகையில்
எப்போதோ யாரோ போட்டிருந்த
ஹாய் எனும் குறுஞ் செய்தி புன்னகைத்தப்படி
இந்த நாளைத் தொடங்க கொஞ்சம் போதுமானதாகவே இருந்தது.
- வாடகை வீடு
அடுத்த வீட்டிற்குக் குடிபெயர
ஆயத்தமான நிமிடம்
இருந்தவீட்டை வெள்ளையடிக்க
ஆட்கள் வந்துவிட
இத்தனை வருடம்
வாழ்ந்துப்போன தடயங்கள் ஏதும் விட்டுவைக்க முடியாதபடி
நகரும் வாடகை வீட்டின் துயரிதுவென
வேதனையில் மனம் சூழ்ந்த நொடியில்
வளர்த்த மரத்திலிருந்து
வேப்பம்பூவோன்று தலைமீது விழ
வாழ்ந்த அடையாளத்தின்
நிஜத்தை சொல்லிக் கொண்டிருந்தது….
கவிதைகள் வாசித்த குரல் : மதுரை சத்யா
Listen On Spotify :
சிறப்பு