– 1 –
உதிர்ந்து கொண்டிருக்கும் பவளமல்லிச் சிவப்புகளை
தாயமாக்கி உருட்டும்
உன் சாமர்த்தியங்களை இப்போது அனுமதிக்கத்
துவங்கியிருக்கிறேன்
கணப்பொழுதுகளில் முழுவதுமாய் கலந்து
பாறையாகும் வல்லமைகள்
மயிலகவல்களின் உயிர்ப்பு
இமைப்பீலிகளில் இதழழுத்தங்கள்
கசப்புக் கலந்த கோப்பிச்சுவை
அது தீராப்போதை
ஈரப்பிடரிச் சிகை கோதி கழுத்தில்
முத்தமிடும் போதெல்லாம் சுவாசமுலரும்
வேனிற் பறவையின் படபடப்பு
எனக்குள்
இந்த நிச்சமின்மைப் பொழுதுகள்
ஒவ்வொன்றும் காற்றின் தீராத
தழுவல்களை இலைகளில் எழுதிப்
போகிறது
பிரபஞ்சப் புள்ளிகளோரம்
நாணல் தும்பை
சேரத்தான் முத்தமிட்டுக் கொள்கிறது
– 2 –
ஏதுமற்றவைகளில் ஏதோவொரு
ஆழ்கடல்
புதரின் செறிவுகளில் அடர்ந்திருக்கும் நாணலசைவுகள்
பாலைநில மண் நகர்தல்
உன் அறியமுடியாத ஆழங்களில்
செவ்வணுக்கள் தேனாகும்
ஒரு குழந்தைமையிலிருந்து
மேலேறும் பனித்துளி
செண்பக மொட்டின் கனிவு
முத்தங்களின் ஈரவேட்கை
மயில்க்கழுத்தின் குறுகுறுப்பு
ஊடுருவுமுன் விரல்களுக்கு
– 3 –
பன்னீர்ப்பூக்களின் சுகந்தத்தில்
நிசப்தத்தை அலகால் உரசி
நித்தியத்தை எழுப்பிவிடும் பறவைச்
சிறகுகள்
தோள்மீது வழியும் நித்தியமல்லியின்
மகரந்த மயக்கத்தில் சூடேறும்
நதிப்படுக்கையினோரம் யாழின் மத்தியிலொரு ஆசுவாசம்
மழையிருட்டுக் காடுகளில் எங்கு தேடியும்
கடவுள் கண்ணில் படவில்லை
இருகூராக்கியின் நுணுக்கத்தோடு
அரற்றும் ஆன்ம மயக்கம்
அது உடலின் நிலையழிதலில்
கருநீலக் குறிஞ்சியின் மகரந்தங்களில்
பட்டாம்பூச்சியைத் தேடுகிறது
நித்திய வனத்தில் இன்னும் தவங்கலையாமலே ஞானந்தேடுகிறான்
சித்தார்த்தன்
கவிதைகள் வாசித்த குரல் : அன்பு மணிவேல்
Listen On Spotify :
அருமை 👍
வாழ்த்துகள் ❤🙌