மரணத்திற்கு அப்பாற்பட்டவர்களாக
வானத்தின் ஜாலங்களைப் பார்த்தபடியே
பூமிக்கு வெகு வெளியே தள்ளிவிடப்பட்ட
ஒரு பாடலால்
கொஞ்சமாய் அழத் தெரிந்தவன்கூட
மோட்சத்திற்கு முன்பதிவு
செய்துவிட்டவனைப் போல
ஒரு பாடலால்
படிந்துகிடக்கிற சலிப்பின் தூசிகளைக்
கதவடைத்து படியிறங்கி
போகின்ற வெயிலைப் போல
ஒரு பாடலால்
மறந்துவிட்ட குதூகலிக்கும்
துன்பங்களின் துண்டுச்சீட்டுக்களை
முரண்டு பிடித்துக் கிழிப்பதைப் போல
ஒரு பாடலால்
கையாலாகாத ரகசியங்களின்
பேரொளியில் நீந்துகின்ற மீனைப் போல
ஒரு பாடலால்
குறிபார்த்து அரவணைத்து
தூக்கி முத்தமிடுகிற
ஒரு பாடலால்
சபிக்கப்பட்ட பழைய காதலையும்
புதுப்பித்துக் கொண்டாடுகிற
ஒரு பாடலால்
நினைவின் மணல்மேட்டில்
வாழ்வின் பூனைகள் வந்தடைகிற
ஒரு பாடலால்
அஞ்சி நடுங்குகிற
துரோகத்தின் கருணையில்
பிசுபிசுக்கும் கவிச்சியைக் கழுவி விடுகிற
ஒரு பாடலால்
நட்சத்திரங்களின் கதகதப்பில்
உயிர்த்தெழும் மீட்பராக
கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிற
ஒரு பாடலால்
பார்க்க முடிகிறதா உங்களால்?
யாரோ வீசியெறிந்த
ஒரு நதியில்
ஊர்ந்துகொண்டிருக்கும்
இந்த இரவின் வண்ணங்களை
இளையராஜாவோடு.