1. மத்தியான ஏப்பத்தில் வீடெங்கும் கடல் வாசம்
ஐந்து கிலோ எடை கொண்ட செம்மீனைக் கீற்றுக் கீற்றாக அறுக்கிறான் மீன் வெட்டி
உருளைக்கிழங்கு சீவலைப் போலக் கீற்றுகள் தராசுத் தட்டில் வழிந்து நிரம்பின
என்னுடைய முன்னாள் எழுத்தாள நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்
மீனைப் பார்த்தாலே அவரது நண்பருக்கு மிகு காமம் பொங்குமாம்
எனக்கு வெட்டப்பட்ட
மீன் துண்டுகள் கடலின் தசைகளாகத் தெரிந்தன
உறையப்பட்ட அலைகள் தராசுத் தட்டுகளில் மிதக்கின்றன
கண்ணகி திருகிய மார்பாக
நீதி கேட்டு நிற்கின்றன
அத்தனை மீன் தலைகளும்
எண்ணை ததும்ப தோசைக் கல்லில் வறுபடும் மீன் துண்டுகளைப் பார்த்து நாக்கு சலாம் போடுகிறது
எனது மத்தியான ஏப்பத்தில் வீடெங்கும் கடல் வாசம்.
2. நித்ய விளையாட்டு
சரணங்களில் தொடங்கி பல்லவியில் முடிக்கும் பாடலை அனுப்புகிறாய்
இள நுங்கு தொண்டையில் அத்தனை இலகுவாய் இறங்குவது போல உன் குரல் பரவிக் கொண்டிருக்கிறது வெளி எங்கும்
நிராதரவற்ற சொற்கள் இப்பொழுது வரிசையில் உன்னைப் புனைந்து கொள்கிறது புதுமொழியில்
கருத்த திராட்சை உதடுகளைத் தேய்த்துத் தேய்த்து ஸ்ட்ராபெர்ரி நிறமாக்கும் நித்திய விளையாட்டு தனித்து நிற்கிறது
மதியப்பசி நிரப்ப நிறைய அசைவங்களைத் தயாரிக்கும் உன் பிரியத்திற்கு தனிருசி
கடலாடிய உடைகளின் ஈரம் உறிஞ்சும் வெயில் மறைந்த கனம் உன் தேடல் நானாக இருந்த பொழுதுகள் பூக்கத் தொடங்கிவிட்டன
ஆவாரம்பூக்களின் மகரந்தத்தைப் பசலையென தடவித் தடவிப் பார்த்துக்கொண்டிருக்கிற
துயர் விடுவிக்க வானேறி வருகிறது
என் பகற்கனா.
3. வால் முளைத்த முகங்கள்
கூழைக்கும்பிடு போடும் முகங்களில் முளைத்திருக்கும் வாலை
சிரிப்பு மறைக்கிறது
கழுத்தில் வால் காலரென முளைக்க அதை வாங்கிச் செல்கிறான்
பாவங்களை ஏவத் தெரியாத அரசியல்வாதி
இந்தப் பாதையில் தான் வளர்ப்பு நாய்கள் பயணிக்கின்றன
கூண்டில் பறவை வளர்க்க ஆசைப்படுபவர்கள் நடைப் பயிற்சி கொள்கிறார்கள்
இரண்டாவது சிட்டிங்கிற்கு ஆசைப்படுபவன் இங்கே தான் தள்ளாடாது தெளிந்து நிற்கிறான்
சொற்களைப் பிடித்து நடை பழகும் எழுத்தன் தன் மூத்த கவிகளின் வருகைக்கு நிக்கோடின் விரல்களாடு ஏந்தி நிற்கிறான்
தன் தொகுப்பை
புதிய துளிர்கள் யாவும் நீண்டு முளைத்திருக்கின்றன
பழைய கால் தடங்கள்
சிலைகளாய் முளைத்து நிமிர்ந்து நிற்கும் இவ்வழியில்
ஆரத் தழுவிப் படர்ந்திருக்கும் பச்சையங்களை மேய
பின்புறம் மட்டுமே வாலுள்ள என் கழுதைகளைத் தவறியும் விடுவதில்லை நான்.
கவிதைகள் வாசித்த குரல் : கார்த்திகேயன் மாகா
Listen On Spotify :