ஒன்றை வெறுப்பதற்கு முன்பாக
அதீத அன்பில் நேசிக்கப்பட்டிருக்கும்
மூழ்கடிக்கும் வெள்ளத்தின்
முதல் துளிபோல
ஒன்றைத் தொலைப்பதற்கு முன்பு
பத்திரமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும்
சிறகு முளைத்த பறவையின்
கூட்டிலிருந்த கணங்களாய்
ஒன்றை மறப்பதற்கு முன்னால்
ஞாபகப்படுத்தியே கிடந்திருக்கும்
அடை வைத்த கோழியின்
கதகதப்பான இருப்பை போல
ஒன்றை நிராகரிப்பதற்கு முன்பாக
ஒட்டிக்கிடந்திருக்கும் அதன் தேவை
அடர்ந்த மரம் தேடிப் பற்றிக்கிடக்கும்
சிறுகொடியின் ஆதரவாய்
ஓர் உறவைப் பிரிவதற்கு முன்பாக
உயிரெனச் சேர்ந்தே இருந்திருக்கும்
முலைக்காம்பை விட்டுப் பிரியாத
முட்டிக்கிடக்கும் குட்டிகளென
நம் உயிர் போவதற்கு முன்பாக
எல்லாருமே வாழ்ந்து கிடந்திருப்போம்
வேர்வை வாசமடிக்கும் முந்தானையில்
தாயன்பைப் பருகியபடி.
ஆற்றுப்படுத்தும் முயற்சியாய் இருக்கிறது
பிரிகையில்
கிளை உதிர்க்கும் துளியாய்
முணுமுணுக்கும் உதடுகளால்
மீண்டும் சந்திப்போமென்பது
மொத்தம்
எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பாயோ
விடைபெறும் வார்த்தைகள் மட்டும்
விண்ணப்பமிடுகின்றன
இன்னும் கொஞ்சநேரமென்று
ஒரு பறவையின்
கூடடைதல் போன்றது
பேசிக்கொண்டிருக்கையில்
நிமிர்ந்து பார்க்கும்
உன் விழிப்பறவையின் சாயல்
மின்னலடிக்கும் பார்வையால்
என் முகம் பார்த்துப் பேசுகையில்
உன் மீசையில் மிதந்தபடியே இருக்கும்
என் ஆசைப் படகு
வலிக்க வலிக்க
வழியனுப்பி வைக்கையில்
படபடக்கிறது
முடிவு செய்யப்படாத
அடுத்த சந்திப்பிற்காக
நம்மிருவர் கண்களும்.