அ) நிலம் கோடிக்கணக்கான
தலைப்பேறுகளைக் கண்டாலும்
தளர்ந்து போகவில்லை
மாறாக, சுருக்கம் நீவி,
திண்ணென்ற தோற்றப்பொலிவுக் கொண்டது.
ஆ) நிலம் என்பது வெளிச்சம்.
தன்னில், ஒரு நேரத்தில் மட்டுமே
இருட்பொழுதை ஆராதிக்கும்.
இ) நிலக்கண்ணில் தெரியும் ஞாபகக்கோடுகள்
அளக்க முடியாதவை.
விழிகளைத் திறந்து திறந்து
நிறைய தீர்ப்புகளைத் தந்து கொண்டேயிருக்கும்.
ஈ) நிலம்
ஒரு விசேடமான கூடாரம்.
அண்டுபவர்களை இளைப்பாற்றி
உட்கார்ந்து கொள்ள அனுமதிக்கும்.
உ) எந்நேரமும்
நிலத்தைக் கொத்தாதீர்கள்.
சிறிது அவகாசம் தாருங்கள்.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளட்டும்.
ஊ) நிலம் தான்
பண்டமாற்றினை அறிமுகப்படுத்தியது.
குற்றுமி நீங்கிய பழஞ்சோறாய்
வயிறை அனல் தண்டாமல் குளிர்ச்சியாக்கிக் கண்ணசரச் செய்யும்.
எ) நிலம்
என்பது ஒரு பாசறை.
புண் ஆற்றும் மருந்தாய்த்
தன்னை உருமாற்றித் தடவும்.
ஏ) நிலம் என்பது பயணப்படுத்துதல்.
ஆயிரமாயிரம் பண்டிகைகள், அதிசயங்கள்
பெருங்காட்சிகள், பீதியூட்டும் நடுக்கங்கள்,
புலம்பல்கள்
எல்லாமுண்டு.
ஆயினும், அது
யாவரையும் அரவணைத்துக் கொள்ளும்.
ஐ) நிலத்துடன்
தாராளமாக உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.
எந்தக் கங்கணக்கட்டலும், கருவறுப்பும் அதற்கில்லை.
எத்திரைக் கொண்டு மூடமுடியும்?
சகவாசம் பார்த்து தன்னைத்தானே
நகர்த்திக் கொள்ளும்.
ஓ) நிலம் ஒரு பெருங்குரல்.
அதிர்வுகளை உறுமியபடி
வறட்டொலிகளை எதிர்கொள்ளும்.
எனப் பேசிக் கொண்டே போன உடலைப் பார்த்து
போதும் உடலே நிலப்பேச்சு … என்றேன்.
மறுபடியும் திரும்பி,
இப்பொழுது சொல்…
நிலம் என்பது உடல்கள் தானென சொல் என்றது.
அதன் கண்களின் ஒளிப்பிரவாகத்தில் என் கண் கூசியது.
கேள் உடலே!
என் அம்மை
நிலத்துடனான பற்றினைத்
துண்டித்துக் கொண்டவள்.
தவிர,
“நிலத்தை உடலாகக் கொண்டாலும்
அதில் உயிரென்பது கால்கள் மட்டுமே”
என்றேன்.
நிலம் சற்று அமைதி கண்டது.
நில மகளையே அமைதியடையச்செய்த மருதநில மகள் கண்ணம்மாளின் கவிதை மிக அருமை.