- கண்ணாடி
முன்பைவிட அதிகமாய்
உரையாடுகிறாய்
அதிகம் சிரிக்கிறாய்
அழகிய கவிதைகள் படைக்கிறாய்
அதிக மகிழ்வாய் இருப்பதாய்
காட்சிப் படுத்துகிறாய்
வெகு எளிதாய் இயல்பு நிலைக்கு
மீண்டு விட நினைக்கிறாய்
நாளின் சுமைகளைக் கழற்றி விட்டு
பகலெல்லாம் அணிந்திருந்த
ஒப்பனையை இரவின்
கண்ணீரில் சுத்தமாகக் கழுவிக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறாய் ….
அடிப்பட்ட நாயின் அடங்கும்
கடைசித் துடிப்பிற்காய் காத்திருக்கும்
சவக்களை அப்பிக்கிடப்பது
அப்பட்டமாய் தெரிகிறது!
- சிலுவை
கண்களால் கொஞ்சம்
உதடுகளால் கொஞ்சம்
விரல்களால் கொஞ்சம்
மனதால் மிச்சம் பேசி தீர்ந்து போனதா நேசம்.
தருவதற்கோ பெறுவதற்கோ ஏதும் இல்லை என்றானபோது
முகம் பார்க்க முடியாது
கூசி நிற்கிறது தேகம்..
முதுகோடு முதுகுரசி கைகள் பிணைத்த நாம்
நமக்கான சிலுவையைச் சுமந்து கொள்கிறோம்.
என் சிலுவை நீயாக
உன் சிலுவை நானாக
சிறகுதிர்த்த ஆசைகளை
அதில் அறைந்து கொள்(ல்)கிறோம்.
கவிதைகள் வாசித்த குரல் : மனோஹரி
Listen On Spotify :
சிறப்பு. வாசிப்பதை விடவும் கேட்க எளிதாக புரிகிறது.