cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்


1.

கைவிட நேர்ந்த
சொற்களை

உயிர்ப்பற்றுப்
போனவற்றை

மீண்டும் அள்ளிப்
புனலில் எறிந்தேன்

தீமூட்டி
காய வைத்தேன்

நிலத்தில்
சலித்தெடுத்தேன்

காலினடியில் வைத்து
குரல்வளையை
நசுக்கினேன்

தன்மானமிக்க
சொற்கள்
பிழைத்துக்கொண்ட
திமிருடன்:

உன் மூதாதையை
இன்று உன்னை
நாளை இன்னொருவனை
எனப்
பார்த்துக்கொண்டேதான்
இருப்பேன்
இவ்வளவு
பதைபதைத்தாயே
விரக்தியின்
உச்சப் பேதலிப்பில்
சங்கில் குதித்தாயே
நீ
மீட்டெடுக்க வேண்டிய
அர்த்தங்கள்
என்னிடம்
உண்டென்றா
நினைக்கிறாய்
என்றன.

கைவிடுதல்
ஒருமுறைக்கானது
என்று புரிந்தது.

2.

எத்தனையோ
காலமாய்
அடங்கி நின்ற ஆதங்கம்
மடைமாற
வழியின்றி‌ச் சீறிவிட்டது

முகங்காண
விருப்பங் கொள்ளாப்
புறக்கணிப்பின்
தசைச்‌ சுருக்கங்கள்
ஒருமுறையேனும்
முகம் பார்த்து நிகழட்டும்
என்ற ஆவல்
தீராதே வடிந்துவிடும்
இந்நாட்களில்

முடிந்தால்
கூடுமானால்
நுரைத் தழும்பப்
பருகு என்னை
என்று யாசிக்கும்
மதுபோலவேனும்
உண்மையாய்ப்
பொங்கும்
முகங்காண
வாய்க்கட்டும்.

3.

குழந்தையின் முகம் கொண்டு
முதுமையின் உடல்பூசி
அமர்ந்திருந்தாள்
அருகில்
மூப்பின் கிலேசத்துடன்
கிள்ளை மொழி உகுக்கும்
பிள்ளையின் சுணக்கம்

ஒரு கையால்
பிஞ்சின் மப்படித்த
வயிற்றை நீவியவாறு
மற்றதனால்
மருந்துக் குப்பியின்
மூடியைத் திருகியபடி
தூங்கிப் போனாள்

அவளது
வெடிப்புண்ட வலப் பாதம்
என்னிருக்கையின் இடைவெளியில்
சர்ப்பமாய் நெளிந்து
உரசத் தொடங்கியது
உறங்கட்டுமென
என் மரப்பட்டை ஜீன்ஸால்
வருடத் தொடங்கினேன்

என்
கருணையைச் சந்தேகிக்கும்
சாவகாசம்
அப்போது யாருக்கும்
இருக்கவில்லை.


கவிதைகள் வாசித்த குரல் :  பிரபாகரன்

Listen On Spotify : 

About the author

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப்

ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Backiyaraj P

மிகச்சிறப்பான கவிதை

You cannot copy content of this Website