cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. ஞாபகங்கள்

அம்மா உன் ஞாபகங்கள்
விரவிக் கிடக்கின்றன
காற்றெங்கும் மலர் மணமாய்

என் பிறந்தநாள் புதுச்சட்டையில்
கழுத்துப்பட்டை நுனிகளில்
நீ அப்பி வைத்த
விரலி மஞ்சள் தூளால்
மங்களம் பாடியதாய் ஒரு ஞாபகம்

வேருக்கு அடியில் விளையும்
மஞ்சள் கிழங்குகளைப் பறித்து
பருவத்தில் நீ
கழங்கு விளையாடியதாக
சொன்ன கதையாய் ஒரு ஞாபகம்

எனக்கு நோயும் வேண்டாம்
மருந்தும் வேண்டாம் என்று நீ
ஆக்கினை செய்து கொண்டாலும்
அதையும் மீறி வரும்
காய்ச்சலின் போது
குடிக்கச் சொல்லி தரும் காசாயத்தை
நான் குடிக்கும் முன்பு
தரையில் மூன்று சொட்டு
‘ஃ’ வடிவில் வைத்து
காப்பாற்றி விடும்படி
பூமாதேவியிடம் நீ
இறைஞ்சுவதாய் ஒரு ஞாபகம்

வௌவால்கள் வட்டமிடும்
புராதனக் கோயில் ஒன்றில்
தரிசனத்திற்குப் பின்
திருநீற்றை எனக்கு வைத்து விட்டு
நீ உன் வலது உள்ளங்கையால்
என் கண்களை மறைத்து விட்டு
துகள்கள் கண்களில்
விழுந்து விடா வண்ணம் ஊதி
எப்போதும் என் கண்களை
என் இமைகளையும்
புருவங்களையும் விட
நீ பாதுகாப்பதாய் ஒரு ஞாபகம்.

2. முகில் வெண்பா

நீ படிப்பாய் என்கிற போது
எழுத வேண்டும் என்கிற என் ஆசை
அபிலாசை ஆகிறது
எழுத நினைக்கும் பாஷை
பரிபாஷை ஆகிறது

இப்படித்தான்
முகில் எழுதும் வெண்பாவிற்கு
மழை என்று
பெயர் வைத்திருக்கிறேன்
பெயர் சரிதானா என்று
நனைந்துவிட்டுச் சொல்
என் வழுக்களை எல்லாம்
வழுவமைதிகள் ஆக்கும் வழாநிலையே

நளினங்களின் நளினமே
விசும்பின் துளி வீழ்ந்து
பூத்த பசும்புல்லாய்
உன் விழியின் பார்வை விழுந்து
பூத்துக் கிடக்கிறது என் காதல்

ஒயில்களின் ஒய்யாரமே
சொக்கித் தான் போகிறேன்
நீ என் சொற்களை வைத்துச்
சொக்கட்டான் ஆடும் போது

நம்மை முத்தமிட்ட மழையை
நீ முத்தியது என்று சொல்லிய போதே
தொடங்கி விட்டது
நம் காதலின் குழூஉக்குறி.

3. கொண்மூ

நுனிமுடி வெடித்துச் சமனற்று
பிருஷ்டம் தாண்டி கருமணலாய்
தழைத்துக் கிடக்கும்
கூந்தலைச் சமன்செய்ய
அவள் அம்மா கத்தரி போடுகிறாள்

‘கொஞ்சமா வெட்டு
கொஞ்சமா வெட்டு’ என்று அவள் அவ்வளவு கெஞ்சியும்
அம்மா இடை வரைக்கும் இருக்கும்படி சமனாக அவளது கூந்தலை
குறைத்து விடுகிறாள்

வெட்டி முடித்த பின்
அவள் தனது கைகளை
பின்னால் கொண்டு சென்று
இடையையும் பிருஷ்டத்தையும்
முடி எவ்வளவு நீளம்
குறைந்திருக்கிறது என்று பரிசோதிக்க
தடவித் தடவிப் பார்க்கிறாள்
பிறந்தமுடி எடுத்த பின்
‘பாப்பாவிற்கு முடி
எங்கே இருக்கு?’ என்று
சொந்தங்கள் கேட்கும் போது
தனது மொட்டைத்தலையைத்
தடவிப் பார்க்கும் மழலையாய்

அம்மா கத்தரித்து வீசிய
அவளது கூந்தல்
கருத்தரித்து வானேகியது
கார்மேகமாய்.


கவிதைகள் வாசித்த குரல் :  நந்தினி துரைசாமி

Listen On Spotify : 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website