- இரை
அங்கே நெடுநேரம் காத்திருந்தான் அவன்
ஒவ்வொரு பேருந்தின் வருகையையும் ஆவலோடு பார்த்திருப்பவன்
தனக்கென்று வரும் உதாசீனங்களை கை நிறைய அள்ளிக்கொள்கிறான்
உதாசீனங்களின் விளிம்பில் ரத்தம் கசிந்து திரும்புகையில்
உணவிழந்த அந்த ராட்சச பொழுதுக்கு இரையாகிக் கொண்டிருந்தது
ஓர் எறும்பு.
- வறுமை
விதவிதமாய் வண்ணங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான் அவன்
அன்பிற்கு வெள்ளை நிறத்தைத் தீட்டியவன்
மகிழ்ச்சிக்கு நீலத்தையும்
வெறுப்பிற்குக் கருப்பையும் சுழற்றியவாறு
வறுமையின் நிறத்தை தேடிக்கொண்டிருக்க
உணவின்றி அழுத மகளின் கண்களில்
நிறங்களற்று வடிந்துகொண்டிருந்தது வறுமை.
- வேட்கை
தொலைந்த வார்த்தைகளைத் தேட துவங்குகிறான் அவன்
தலையில் சூடிய நிராகரிப்புகளையும்
தோளில் ஏந்திய விரக்தியையும்
அடையாளங்களாக குறித்துக்கொண்டவன்
அறையின் மூலைக்கும் கொல்லைப்புறத்திற்கும்
தேடலைத் துரிதமாக்குகிறான்
அங்குமிங்கும் அலைந்து அயற்சியில்
சுவரருகே ரத்தம் கொப்பளிக்கக் கிடந்த வார்த்தையின்
கண்களில் மிளிர்ந்தது சுதந்திரத்தின் வேட்கை.
வறுமை 🔥🔥👌, superb writing sakthi