நெருப்பள்ளிக் கொட்டிய
பெருங்கோடைக்கப்பால்
காலத்தின் பிறழ்வு
கண்கள் கசிய
ஈரம் கேட்டு இரஞ்சிய
கைகள் நிறைய காணிக்கைகள்
கல்யாண வீட்டுக்குரிய
கலகலப்புடன்
வேட்டுக்கள் முழங்க
மின்னல் மத்தாப்பு கொழுத்தி
உற்சவம் ஊருக்குள் நடக்கும்
வானக்கொடி சாய்ந்து விழ
நீர்ப் பூ மலர்ந்து
கொத்துக்,கொத்தாய்
வளையங்கள் கோர்க்க
மகிழ்வில் மாலை அணிந்து
தலைவாரி பூச்சூடி
நிரம்பித் ததும்பும் தாழ்நிலம்
வெயில் புன்னகை வேண்டி
தவக்காலத்தை
தொடக்கி வைக்கும்
குளிர் வசிக்கும் ஏகாந்தம்
பச்சிலைகளில் முகம்பார்த்து
வனத்தின் பரவசத்தை ரசித்தபடி
நகரும் நதி
ரீங்கார மெல்லிசை
தவளைமேளம் ஒலிக்க
இசை குவிந்த முற்றம்
இமை கசிய முற்றும்
தோணிகள்
தோணாவிற்குள் கரையேற
கரை,வலைகள்
காலத்தின் மாய வலையில்
சிக்குண்டு கிடக்கும்
அடைமழை தொடர….,
முதல்நாள் மகிழ்வு
மூன்றாம் நாள் முடிவுக்குவரும்
வஞ்சிக்கப்பட்டதாக
வசித்தலும் வாழ்வும்
குடை வேண்டாம்
கொடை வேண்டுமென மனம்
இயலாமைகளால் இரட்சிக்க
காலநிலைக்குள் எங்கள் களம்
கண்கள் நிரம்ப கடலாகும்
விளிம்பு நிலையில்
நிகழ்கால நிலவரம்
வீதிக்கு வந்து விதி அழைக்க
ஊரை இன்னொரு ஊருக்கு இடம் மாற்றும்.