நீண்டதொரு சமவெளி
நடைப்பயணத்தில்
இடைப்படும்
நெடிய மணல் மேட்டில்
அசந்து போன
கால்களையும்
மூச்சுவாங்க போதாத
நுரையீரல் பைகளையும்
சற்றே
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
உன் மடியமர்ந்து..
உணர்வு பெருக்குகளின்
மத்தியில் காட்டாறாய்
தறிகெட்டுத் திரிந்த
என் மனம்..
இன்று
உன் கைகளுக்குள்
பரிசல் ஓடும்
ஒரு நதியாய் தவழ்கிறது.
நத்தையின் முகவரியாக
அறியப்பட்ட கூடோ
நத்தையின் இறப்பிற்குப் பின்னும்
முகவரி சொல்கிறது.
கதவு தட்டப்படும் போது
திறப்பது என்னவோ
தடங்கள் மட்டுமே
இற(ரு)ந்த கதை சொல்ல…
கூடு திரும்பும் குருவிகளே
நேரத்தில் நித்திரை கொள்க
வைகறையில் சிறகு விரித்து
என் வனப்புத் தேவதையை வரவேற்க..
மாலை மயக்கிய
தோகை விரி மயில்களே ஓய்வு கொள்ளுங்கள்
காலை என் ஆட்டம் காண..
துள்ளியோடும் மான் கூட்டங்களே தள்ளியோடுங்கள்
எதிர்த் திசையில் என்மானைக் காணப்
பாய்ச்சலில் என் கால்கள்..
கண்டேன் சீதை!
என்று யாரும் பரவசம் தராதீர்கள்..
என் சீதை கண்டு தழுவி
நானேப் பரவசம் பெறுவேன்..
கோடையின் வெம்மை காட்டி
வாடையாய் வாட்டி
பருவக்காற்றாய்
பயணப்பட்ட
அவளின் மூச்சுக்காற்று
என் திசை திரும்புகிறது…
இனி வானெல்லாம் வானவில்
இரவெல்லாம் தீபவொளி
வீசும் காற்றெல்லாம் தென்றல்
மனதெல்லாம் திருவிழாவிற்கு
நாட்களை எண்ணும்
குழந்தையின் குதூகலம்
என் வாசல் தோறும்
இனி வசந்தத்தின்
வாசமே…!