- நினைவு.
பீட்ரூட் வாங்குகையில்
ஒலிக்கும் பாடலில்
ஏ.சி குளிரோடு இசைந்து
வருகிறது சரோஜாதேவியின்
நளின நடை
இறக்குமதிப் பழங்கள் பக்கம்
நகரும் போது
நிலவு ஒரு பெண்ணாகி
வயலினில் வழிகிறது
மானல்லவோ கண்கள் தந்தது
என உறுதிப்படுத்திக்
கொண்டு திராட்சைக் கொத்தை
எடுக்கிறேன்
பச்சைமிளகாய்ப் பக்கம் போகையில்
எம்ஜிஆர் நம்பியார் கத்திச்சண்டை ஒலி கேட்பது
எனக்கு மட்டுமா?
டிஜிட்டல் தராசில் எடைபோட
வரிசையில் நிற்கையில்
என்னை மறந்ததேன் நெஞ்சமே
எனக் கதறியழுகிறது
இந்நாள் பழமுதிர் நிலையமான
முன்னாள் திரையரங்கு.
- சிறகற்ற புள்ளினங்கள்
அனுபவ ஆசானின் கையை உதறி விட்டு
ஏட்டுச் சுரைக்காயில் கூட்டு
அடுத்த வீட்டின்
முகங்களையறியாது முகநூலில்
கண்டங் கடக்கும் லைக் ஷேர் நட்புகள்
மின்காந்தப் பேருலகில் முகமூடியணிந்தபடிச்
சமுதாய அவலங்களைச் சாடியகளைப்பில்
காணொலியில் நீலப்படம் தேடும் நெட்டிசன்கள்
பேரறிவின் கடும் கடவுச் சொல்லையும் எள்ளி நகையாடி எளிதாய்
வேவு பார்க்கும் மென்பொருள் வன்முறை
சுமக்க முடியா மதிப்பெண்களுடன்
சிறு சொல்லுக்கும்
உயிர் நீங்கும் அறிவாளித் தலைமுறை
சிறுகச் சேமித்த வாழ்வாதாரத்தை
ஒரே ஓடிபியில்
அக்கவுண்ட் மாற்றும் இணையக் குற்றங்கள்
பெகாசஸ் உபயத்தில்
ரகசியமேதுமில்லாப் பெருவாழ்வு
பெயரடையாளமெல்லாம் எண்களாய்ப் போன உலகில்
பொன்முட்டைகளை அவநம்பிக்கையிடம் தொலைத்துக்
கற்கள் அடைகாத்துக் கிடக்கின்றன சிறகற்ற புள்ளினங்கள்.
- ஒளியைப் ஈனும் காரிருளின் வேதனை
காத்திருப்பின் வெப்பம் தீர
பகல் மீது கவிகிறது காதல் கொண்ட இரவு
பற்றிப் படரும் ஆவேசத்தில்
இரவின் உடலில் நட்சத்திரக் கீறல்கள் இடுகிறது பகல்
பாகுபாடு ஏதுமற்ற கூடல்கள் வாய்க்கப் பெற்ற நற்செய்தியறிவிப்பில்
ஒளிச் சிசுவைச் சுமக்கிறது
சூல் ஏற்ற அல்
ஒவ்வொரு பிரசவிப்பிற்கும்
அடி வயிற்றில் வேதனை கிழிக்க
ஒளிக்கீற்றை ஈன்று புறந்தரும் இரவின் வேதனை
பகலறியா ஒன்று.
நினைவுகள் அலாதியான அனுபவ கவிதை ஆசிரியரே. சிறகற்ற புள்ளிகள் சிறப்பு. காரிருள் ஈனும் கற்றை வெளிச்சம்… அழகு கவிஞரே