- வீணையின் ராகம்
முழுவனத்தில் பிரவேசித்த
பறவையாய்
களிப்புற்று இருக்கிறேன்
நீள் அமைதியில்
தொலைத்தப் பொழுதைகளை
கூட்டி பெருக்கி வகுத்தால்
மீதிஇன்றி
ஈவாய் நிறைகிறாய்
ஓயாமல் உன்னைகொரிக்க
தொடங்கி
வனமாய் மாறிநிற்கிறேன்
உரமாய் மாறி
வளர்த்த கதையை
உன்னிடத்தில் பகிர
நீயும் அலுப்பின்றி
என்னைப்போல
அக்கதையை
ஊ கொட்டிக்கொண்டிருக்கிறாய்
அறிந்ததை
அறியாதைப்போல்
கேட்பதும்,பகிர்வதும்
ஒரு இசையைப் போல்
இருக்கிறது இக்காதலில்
- தெளிவற்ற வானம்
வாதையற்ற உடல்
கானல்நீராய்
புறக் கண்களுக்கு
அகப்படலாம்
திரைசீலையாய்
ஆடியாடி பரிதவிக்கிறது
உயிர்.
சுடரில் கருகும்
திரியின் மணம்
கமழ்கிறது
மனஅறை முழுதும்
காற்றற்ற
இராட்சக் காற்றாடி
சுழல முடியாமல்
வெறிக்கப் பார்கிறது
வானத்தை..
இருட்டை
விழுங்க முடியாமல்
கோரமாய்
ஒலி எழுப்பும் ரயிலொன்று
எனக்குள்
ஓடிக்கொண்டிருக்கிறது
உன்
சொல்லற்றப்
பொழுதுகளில்
- அவ்வளவுதான்
சுவற்றில் அடிப்பட்டு
திரும்பும் பந்தைப்போல்
அச்சொல்
மனிதர்களிடத்தில்
திரும்பி வருகிறது.
காற்றில் அலையும்
சொற்களுக்கு
மடிதர நினைக்கையில்
சுமைதாங்கியாகிறேன்
தானியம் கிடைத்த
பறவையைப்போல்
கொத்திக் கிளற
அவ்வளவுதான் சொல்லில்
எவ்வளவு இருக்கிறது
துயரம்
முடிவு
மகிழ்ச்சி
இகழ்ச்சி
தாழ்ச்சி
உயர்வு
நிறைவு
நீண்ட பட்டியல்
தொடர்கிறது
மரண வாசலில்
கிடப்பவர்
இதில்
எதை எடுத்துக்கொண்டு
செல்லுவார் என்றவுடன்
ஓட்டுக்குள்
புதைந்து கொள்ளும்
நத்தையைப்போல்
சுருங்கிவிடுகிறது
மனம்.
அவ்வளவு தான்
என்பது
எளிதில் கடந்துவிடமுடியா
சொல்.
- எண்ணம்
நமக்கிடையேயான
சண்டையில்
கொப்பளிக்கும்
கோபத்தை
கட்டுப்படுத்தியிருந்தால்
நான்கு
சுவரைத்தாண்டி
கை,கால்
முளைந்த
பறவையாய்
சொற்கள்
பறந்திருக்காது.
இப்போது
அவை
ஒவ்வொருவரின்
விழிகளிலும்
ஒவ்வொருவிதமாய்
வளர்ந்து கொண்டிருக்கின்றன.