1.
பேசித்தீர்க்காத காரணங்களை அறிந்தே
அந்தாட்களை அமைதியாய் கடந்தோம்..
வார்த்தைகளை அனுப்பவும் அழிக்கவுமாய்
பேசாத தவிப்பின் வெம்மை ஏறிய நாளில்
நீ தான் பேசவில்லை என எல்லாக் கோபத்தையும்
என் கையில் கொடுக்கிறாய்..!
நீயாகப் பேச நான் காத்திருந்த பொழுதுகளை
உன்னிடம் எப்படித் திருப்பிக் கொடுப்பது?
கேட்பதற்கான பொறுமையற்றிருந்த உன் செவியில்
என் வாய்ச் சொற்கள் வீணாகியது..
எல்லாம் முடிந்ததென முற்றுப்புள்ளி வைக்கிறாய்!
உன் நியாயங்களோடு நீ முன்னேறு…
சோர்வுற்று அமரும் ஒரு நாளினில் …
நீ சாய்ந்து கொள்ளும் அருகாமையில் நான் இருப்பேன்!
2
வார்த்தைகள் அற்ற பொழுதினில்
பிடிவாதமாய் பேசக் காத்திருக்கிறாய்.
காற்றோடு கலைந்த சொற்களை
எப்படிக் கோர்த்தெடுப்பேன்?!
என் மூச்சுக்காற்றில் தேடிக்கொண்டிருக்கையில்
கைப்பிடித்துக் கதைக்கச் சொல்கிறாய்.
நெஞ்சில் பெருக்கெடுக்கும் அன்பைக் கூட்டி
சொல்லாய் வார்த்தெடுத்து உனக்காகக் கூறுகிறேன்..
என் குரல் எனக்கே கேட்காத அந்த நொடியில்
எனை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தாய்..
நீ திரும்பி வரும் வரை இந்த வார்த்தைகளைத்
தொலைக்காமல் இருக்க வேண்டும்!
3.
மிகச் சாதாரண நாளில்
இந்த உலகம் பிடிக்கவில்லை
எனத் தேம்பி அழுகிறாய்…
உன் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறேன்
அருமருந்தாகும் என் நிலத்திற்கு…!
இந்தப் பெருங்காட்டில் வெளிச்சமில்லை,
பெயர் தெரியாத மலர்கள் அழகில்லை,
அருவியில் வெப்பம் இல்லை,
நட்சத்திரங்கள் பிரகாசமாக இல்லை,
என அடுத்து அழுவதற்கான காரணங்களை
அடுக்கிச் செல்லும் உன் முன்
மந்திரக்கோலை இழந்த மாயக்காரியாக
மருகிக்கொண்டிருப்பதில் உடன்பாடற்றிருந்தேன் நான்!
ரகசிய தேவதையினை தேடிச் செல்கிறாய்
வனமோகினியாய் நான் காத்திருப்பதை அறியாமல்..
வரம் தந்தேன் உனக்கு என் யுவனே..
உன் குருதியின் நிறம் இளஞ்சிவப்பென
அறியத்தரும் நாளில் உன் தேவதையைக் காண்பாய்…
மெளனித்த உணர்வுகளின்… அன்பு பிரவாகம். அருமை ராணி கணேஷ்
நன்றி மஹா!