- என் வண்ணத்துப்பூச்சியைத் திருடியவள்
துருதுருவென என்னுள்
சுற்றித்திரிந்த வண்ணத்துப்பூச்சி..
திருடுபோனது
கல்லறையில் உறங்கிய நாளொன்றில்..
நான் நடக்கும் திசையில்
என் தோள்சாய்ந்து கவிதை படித்தது…
இரு சக்கர வாகனத்தில்
றெக்கை விரித்து எனை
பறக்கச் செய்தது..
இரவுநேர பாடலை எனக்காக
இசைத்திருந்தது..
அந்த வண்ணத்துப்பூச்சி
இப்போது யாருமறியா
திசைவழியே…
நிறம் தொலைத்து
கடத்தப்பட்டிருந்தது..
செல்லும் பாதையெங்கும்
விழிகளைப் புல்லின் மேல்
பதித்திருந்தது..
சிரிப்பை பேருந்து இருக்கையில்
விட்டுச்சென்றிருந்தது..
உயரமான ராட்டினத்தின்
உச்சியில் நின்று
எனை எக்காளமிட்டது..
அந்த வண்ணத்துப்பூச்சி..
இப்போது எதிர்முகம் தெரியா
காட்டிற்குள் களவாடப்பட்டிருந்தது..
மரக்கிளையில்
மலைமுகட்டில்
காட்டின் கறுமைக்குள்
கண்டும் கிடைக்கா வண்ணத்துப்பூச்சி
கடல் நடுவே கப்பலில் பயணித்த
செய்தியொன்று என் காதுகளை
கொஞ்சம் ரணமாக்கியது..
காற்றின் வெடிப்பில்
கல்லறை பிளக்க..
கண்டுகொள்கிறேன் அவளை..
அதோ அவள்! அவளே தான்!
என் வண்ணத்துப்பூச்சியைத் திருடியவள்..
அவள் கைப்பையின் நுனிநின்று
வேடிக்கைக் காட்டுகின்றன..
இரு வண்ணத்துப்பூச்சிகள்…
- கடிகார முட்களின் காதலன் நான்
என்னில் தொலைந்த
கடிகாரமொன்று
என் இடக்கையைக்
கரம்பிடிக்க எத்தனிக்கின்றது..
திசை தெரியா காட்டிற்குள்
வைத்துவிட்ட கடிகார முட்கள்
பறவையின் இறகில் சிக்கிக் கொண்டன..
ஓய்ந்த நள்ளிரவில்
உறங்கும் கணத்தில்
பறவையின் எச்சத்தில்
வந்து விழுகின்றன..
கடிகாரமும் காதலிக்கும் முட்களும்..
என் தலையணைக்குள்
முகம் புதைகக்க நினைக்கும்
முட்களின் மத்தியில்
இதயம் புரண்டு படுக்கின்றது..
நான் செல்லும் திசைகளில்
காலணிகளோடு கதைபேசி நடக்கும்
கடிகார முட்களின்
காதுகளில் வழிந்தோடுகின்றது
என் காதல்…
நிமிடங்களாக…