- பறக்கும் சுயமியின் பின்பக்கம்
பால்வீதியைத் தொடும் பாவனையில்
உயரே பறக்கும் கழுகுகளே
நீர்மை மறந்த கொக்குகளே
கோழிகளையும் மீன்களையும்
சுவைக்கத் தோன்றுகையில் மட்டும்
தரையிறங்கும் சந்தர்ப்பச் சிறகுகளின்
தேசியம் இன்னதென்று தெரியவில்லை
‘யாதும் ஊரே யாவரும்…. ”
என்று பாடும் உங்கள் கீதம்
மிக இனிமை
உங்களை அண்ணாந்து பார்க்கும்
ஊர்க்குருவிகளோடும் பச்சைக்கிளிகளோடும்
அவ்வப்போது சுயமி எடுத்துக் கொள்ளும்
அழகு கொள்ளையோ கொள்ளை
ஆயினும்..
பெரும்புயலை நேசிக்கும் இலாவகம்
கற்ற நீங்கள்
அடுத்த அடுக்கில்
உம் பாதையை கனிவோடு வணங்கி
தன் திசையில்
பயணிக்கக் காற்றோடு போராடும்
இரண்டாம்சாதிப் பறவைகளை
கண்டும் காணாமல் போவதோடு
அவர்களின் வலசைப்பாதையையும்
அடைத்துப் போகிறீர்களே
உங்கள் பாட்டைக் கொஞ்சம் நிறுத்துங்கள்
அரசனென்ற பதவி பறிபோகுமென அச்சமா
முதலிடம் மேல் அத்தனை மோகமா?
சொல்லி விட்டுச் செல்லுங்கள்
- அலைபேசியும் அலைதல் நிமித்தமும்
அவளிடம் மாபெரும் ஊடல் பருவத்தின்
சிறுமந்திரம் ஒன்றுண்டு
அவனின் எண்களில் ஒன்றை
Dont attend என்றும் மற்றொன்றை
Made you mad என்றும் சேமித்து விடுவாள்
அப்பொழுதெல்லாம் அவனின் அழைப்புகள்
பல குவிந்தும் விடுபட்டுப்போயும்
பேயாய் அலையும்
இடது கட்டை விரலில் தொட்டுப் பார்த்து
வலது ஆள்காட்டி விரல் தேயத் தேய
அவற்றைத் தீண்டியே இரவை நசுக்குவாள்
வலி பொறுக்காத இரவு
ஜன்னல்வழி தப்பித்தோடி
இசைஞானியின் அலைப்பரவலாய்
நீண்டு அவன் தலையணைக்குள்
புகுந்து அதிரக்கதறும்
நீலம் திறக்கும் வைகறையின் வாசலில்
இருவரில் ஒருவர் மன்னிப்புநீரை
அள்ளித் தெளித்துக் காத்திருப்பர்
ஒரு முத்தவாசல் கோலத்தில்
விழுவதற்குத்தான்
எத்தனைச் சுற்றுப்பயணம்
- வளைகுடத்தின் ஒளிப்பேச்சு
நாலைந்து நலுங்கல்கள் ஆனாலும்
புளி போட்டு தேய்த்தும்
பீதாம்பரியில் ஊறியும்
இன்னும் மின்னிக்கொண்டுதானிருக்கும்
அந்த பித்தளைக்குடத்தின்
வளை உழைப்பும் குளிர் குழைவும்
அறிந்திராத நீ
பழைய ஈயம் பித்தளைக்கு
பேரிச்சம் பழம் என்று
வாசலில் கூக்குரல் கேட்கும்போதுதான்
ஓடி வருகிறாய்..
எனது என்பவை
எடுப்பார் தேடி வருகையில்தான் ஒளிருமோ?