- வீடு
இரு கால்கள் கொண்ட
அதிகாரக் குரல்களில்லாது
கால்களேயற்ற மணிப்பொறியின்
பேரிரைச்சலுமில்லாது
கனவிற்கு பெரும் விபத்தேதும் நிகழாமல்
வீடெனும் மாளிகையில்
என்னறையின் மந்திரக் கதவைத் திறந்து
விழிக்க வேண்டும் உறக்கம் துறந்து!
கைகளால் செய்கை காட்டி
கண்களால் சாடை சொல்லி
தெருவில் நிற்பது போலில்லாமல்
இரு நுரைக்குமிழிகள்
ஒன்றோடொன்று மோதி உடைவதைப்போல
நினைத்தவுடன்
நாமிருவரும் செல்லமாய் மோதிக்கொள்ள
நமக்கே நமக்கான
ஒரு சொந்த வீட்டைக் கட்டுவோமா?
தன் எண்ணங்களைத் தரைமட்டமாக்கி
எழுப்பிய சொந்த வீட்டில்
வாழ்வதென்பது
அடிமைச் சங்கிலி பூண்டு
எதிரி நாட்டு அரச மாளிகையில்
நடமாடும்
ராஜகுமாரியின் நிலையாயினும்
கிரீடமணிந்த ராஜகுமாரியாய்க்
கையில் வாளோடு
கம்பீரமாய் நடக்கப் பழக்கிவிடுகிறது
பாழாய்ப்போன இந்த சமூகம்.
சுவர்கள் மட்டுமே அறியும்
அவளின் ரெட்டை வேடத்தை!
குளித்து முடித்துப்
பதட்டமேதுமின்றி
பாத்ரூமிலிருந்து வெளிவந்து
அரைகுறை உடம்பை
முக்கால்வாசி வீடு பார்க்க நடந்து
உலர்த்த முடியா சூழலில்
எழும்பியிருப்பது
எங்ஙனம் சொந்த வீடாக அமையும்?