திறந்துகிடக்கும் என் வீட்டிறப்பில்
சருவமும் உடைந்து காணப்படுகிறது
திவலை திவலையாய் முழுநிலவு !
வெற்றுக்கூடையில் பொறுக்கிப் பொறுக்கி
நிரப்பிக்கொண்டிருக்கிறாள் ஓரு பதின்மச் சிறுமி
சீக்கிரம் சேமித்து விடு, என் ரூபவதியே
அள்ளிருள் அச்சுறுத்துகிறது !
ஒள்ளொளியில் அவள் நயனங்கள்
ஓர் இசைக்கலைஞனிடமிருந்து
களவாடப்பட்டிருக்கவேண்டும்
அவ்வளவு சீக்கிரம் அவள் என்மேல்
பிரீதியாயிருப்பாளென்று நினைக்கவில்லை
வன்னிமரமும் வேங்கை மரமும்
கான்றை மரமும் அடர்ந்த வனத்திலிருந்து
தப்பித்துவந்த மதியின் சாகசம் புரிகிறது !
புகழ்பெற்ற உறைவிடமாகிறது என் வீட்டு முற்றம்.
அதற்கப்பாலுள்ள பிரபஞ்சம் கசடு நிறைந்தது !
அந்த வெண்ணிற நிலவுக்கு அதீத வெறுப்பு
அருவருப்பும் செத்த நெடியும் அகலாத அவலமும்…
ஒளியில் கரைந்து போகாத சிறுமகளே
நீ போய் நாளை கும்பிருட்டுக்கு முன் வா
நிலவு மீண்டும் சிதறும் !
நீ சேகரித்தவை வெள்ளித் துகள்கள் அல்ல
அத்தனையும் மனித இனம் பொறாமை கொள்ளும்
வெண்பொன் சித்திரங்கள் !
எந்த இசைக்கலைஞனும் புரிந்து கொள்ளாத
ஒப்பற்ற ஒளிர் முகங்கள் !