cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

கூவத்துக்காரி கவிதைகள்


01. தனிமையின் தடம்.

மண் மூடும் நாள் சொல்லி

 மரணம் என் கண்களை மூட ….

 

கண் திறந்து பார் என்று

அருகில் அவள் குரல் கேட்க….

 

மரணத்தின் கைகள்

 விலகினாலும் ….

 

உயிர் என்னை விட்டுப்

பிரியத்தான் செய்தது….

 

தன் பிறவியின் பயனை

 அடைந்து அவளின் தடம்

 பின்பற்றிச் சென்றது என் ஜீவன்.

 

ஒரு தலையாய் காதலிப்பவன்

கடனாய் ஒரு கவிதை கேட்க,

இப்படிப்பட்ட அப்பட்டமான

பொய்கள் சகஜம்.


02. தனிமையின் நண்பன்.

கண்கொண்டு பேசி…

கரம் பிடித்து விளையாடி…

பழக்கம் முற்றிப் போய் அவன்

இடம் விட்டு விலகி…

என் அருகில் அமர்ந்து கதை பேச…

 

ஒரு கட்டத்தில்

அவன் உறவினர்கள் பார்வையும் பட

என்னை அறிமுகம் செய்யவும்

அவன் யோசிக்கவில்லை.

“கூட்டேரிப்பட்டுலான் எறங்கு”

நடத்துநர் குரல் கொடுக்க….

 

பிரிந்து சென்றான் மூன்று வயது

முன் இருக்கை நண்பன்..


03.தனிமையின் உறக்கம்

புறப்பட்ட இடத்தையும்

போய்ச் சேர வேண்டிய இடத்தையும்

மறக்க வைக்கும் ஜன்னல் ஓர இருக்கை

 “இருளும் …

காற்றும்…

ஒற்றைக் கால் மரமும்…

பாதியில் நிறுத்தப்பட்ட

ஓவியமாய் மதியும்…”

மெய் மறந்து சூழல் மறந்து

 ரசிக்கவைக்கும் சக்தியில்

இயற்கைக்கே முதலிடம் என்றாலும்,

இறங்கவேண்டிய இடத்தை விட்டு

அடுத்த நிறுத்தத்தில் இறங்கியதன்

காரணம் இயற்கையும் இல்லை

என் ரசனையும் இல்லை.

 

சௌகரியமான ஜன்னல்

ஓர இருக்கையின் பயனாய் சிரம்

சாய என்னைப் பற்றிய உறக்கம்..


04. தனிமையின் மாயை.

அன்று, தனிமையைச் சமாளிக்கப்

பாடல்களுக்கு என்னை

அடகுவைத்தபோது….

 

என்றோ, இரவில் மாடி சுவரில்

சாய்ந்தபடி மணிக்கணக்கில்

என் கண்கள் நிலவில் பதிந்து

கிடந்தபோது….

 

மை இருட்டில் ஊதகாற்றின்

சத்தம் கேட்டு நான்

மிரண்டபோது….

இவ்வாறாக. உடன் யாருமில்லை

என்ற மாயையில் நான்

திரிந்து கொண்டிருக்க என்

பாதம்பற்றிய படி என்னோடு

நீ இருக்கிறாய்..

 “நிழல்”

About the author

கூவத்துக்காரி

கூவத்துக்காரி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website