- தர்க்கவியல் !
மோதிக்கொள்ளும்
இருவருக்குமான
எறியப்பட்ட
சொற்கள் கற்களாகி
காயப்படுவது
இல்லாது இருக்கும்
யாரோ!
விசித்திர வேதனைகளை
விரட்டிய விரக்திகளின்
பின்னணியில்
சிரிப்பது
மீட்சிக்கான கடவுளோ
என எண்ணம்
எழும்புகிறதொரு
பேரலையாய்!
கரையாய் நனைந்த
ஈர மனதினுள்ளே
தர்க்கங்கங்களைத்தாண்டிய
ஒளிர்தல் நிகழ்கிறது!
தொடக்கமும் முடிவும்
அறியாப்புள்ளிகளாய்
ஊசலாடுகின்றன
தினம் தினம்!
பேரண்ட இயக்கத்தின்
தொடர்பு மௌனங்கள்
தொடரும்
எதோ இலக்கு புரிபடாமல்!
முடிவு
தெரிந்துவிட்டாலோ
புரிந்துவிட்டாலோ
நிம்மதியெனும்
கூக்குரல்களுக்கு
விடை கிடைக்காது!
- கிளறுதலின் நிலை !
இறந்தகாலங்களைக்
கிளறும் அவனால்
சில
நினைவுக்கிளைகள்
மிருதுவாய் விரிகின்றன!
சில இருண்ட
மற்றும் ஒளி கொண்ட
பக்கங்கள்
ஓடி வரலாம்!
உள் வாங்கி
வெளிக்கொணர்தலின்
சாகசங்கள் சறுக்கல்கள்
என
திசைகள் தெரியலாம்!
சொற் சூட்சுமங்களின்
பின்னணியில்
அடர்பாலையென
வெப்பங்கொண்டு
கடந்தேறின பொழுதுகள்!
நீட்சியில்
ஏதும் புதுமை
உண்டாவென
சிந்தனை லயிப்பில்
வலிந்த பொருள் தேடல்!
ஆயினும்
பல மறந்துபோகவே
விரும்பி
நிகழ்வைச்சுற்றிய நினைவு
பிரவேசிக்கும்
எதிர்காலம் மீண்டும்!