- எப்படி நிகழ்ந்தது கொலை ?
எந்த பாகத்தை அறுத்தாலும்
விடையின்றியே திறந்தது
ஓங்கிய உயரத்தை
உருவான விசையை
சொருகிய துல்லியத்தை
பாய்ந்தோடிய குருதியை
தனித்தனியே பகுத்து
அட்டவணைப்படுத்தினார்கள்.
எப்படிக் கொன்றாய் ?
கொல்லும் கணம்
எங்கிருந்து
பாய்ந்து வந்து
இயக்கியது ?
தீராத கேள்விகளால்
மீளவும் அறுத்தார்கள்.
கொல்லப்பட்டவன்
அமைதியாக இருந்தான்.
கொன்றவன்
” கொல்” என்றான்.
- இரண்டு இருட்டுகள்
கூந்தலைத் தீண்டுகிறவன்
அவர்கள்
மூழ்கியிருந்த
இருட்டைத் தீண்டுகிறான்.
நினைவூட்டல் அல்ல
அழைப்பின் சமிக்ஞைகள்
பரவுகிறது அருவியாய்.
தாளமுடியாமல்
பின்பக்க கிளிப்பை
சரியாகப் பொருத்துவதாக
விலக்கி விடுகிறாள்.
அந்தரங்கத்தை
ஒலிபரப்பும்
வளையல்களை
நெஞ்சுக்குள் உடைக்கிறார்கள்
இருட்டில்
தெறிக்கிறது குருதி.
ஃபோனில்
திசையறியா நகர்த்தல்களில்
அலைந்து கொண்டிருக்கும் போது
திறந்து கொள்கிறது
அவனது குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்கும்
வீடியோ.
சம்பிரதாயமாக
புன்னகைக்குப் பின்
பாய்கின்றன கரங்கள்.
மூடுவதற்குள்
வெளிச்சம்
பிரவாகமெடுத்துப் பாய்கிறது
காலியாக இருக்கும்
அவள் வீட்டு வாசலில்.
தொடும் திரைகளை
இருட்டாக்கிய பின்பு
அடுத்தடுத்த நிலையங்களில்
இறங்கி நடக்கின்றன
இரண்டு இருட்டுகளும்.
- குதிரை சவாரியின் நிழல்
மணிக்கட்டுகள் தோறும்
தித்தித்துக் கொண்டிருக்கிறது
கடிகார மிட்டாய்.
கையேந்துவோர்க்கெல்லாம்
கொடையளித்த பிறகும்
வற்றாத பேருடலை
சுழற்றி சுழற்றி
உரித்துக் கொண்டிருக்கிறான்
கலைஞன்.
கைவிரல் சுழற்றியதும்
கடிகாரம் தோன்றும் கணத்தை
தித்திப்பு நாவுகளைத்
திறந்து வைத்திருக்கும்
குழந்தைகள் அறியவில்லை.
உச்சியில் ஆடும்
பொம்மையின் கண்கள்
வெறித்துப் பார்க்கும்
கடற்கரை மணலில்
ததும்பி வழிகிறது
உப்பின் கடிமணம்.
கண்களைப் பொத்தி
மணியடித்து
திசைதிருப்புகிறான்.
கரையும் கடிகாரங்கள்
கடல் விட்டகலும் இருளில்
எங்கிருக்கிறது எல்லாமும்
என்பதை அறியாதவன்
பொம்மையை அடித்து
புலம்பத் தொடங்குகிறான்.
தயாரிக்கும் தித்திப்பை மறந்து
தன்னையே உரித்து
தின்னத் தருவதாய்
மேட்டிமை அவனுக்கு.
கம்பீரமாக கணைக்கிறான்
குன்றியொலிக்கும் மணியோசையும்
வெறித்த கண்களும்
முற்றிலும் மறைகின்றன
அந்தியில் பெரிதாகும்
குதிரை சவாரியின் நிழலில்.
- நித்திரைத் தெரு
நித்திரைத் தெருவுக்கு வெளியே
கழிவறை செல்லும் வழியில்
இருபுறமும் திறந்திருக்கும்
கதவுகளுக்கு நடுவே நிற்கிறாள்.
கண் கூசும் வெளிச்சம்
இறக்கிவிடுவதற்கு
ஆயத்தப்படுத்துகிறது.
அபார்ட்மெண்ட்
கதவிலக்கங்கள் பதிக்கப்பட்ட
சன்னமாக எரியும் நீல விளக்குகளில்
எழுபத்தி இரண்டு வீடுகள்
ஆழ்ந்த நித்திரையில்
குறட்டை விடும் ஒலி
துடித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த ஊரில் இறங்கி
நித்திரையற்று
நின்று கொண்டிருக்கும்
தெருவின் பெட்டிக்கு
செல்லும்படி
அதிகமாக சப்தமிடுகிறார்
பரிசோதகர்.
பெர்த்திலிருந்து
எழ விரும்பாதவர்கள்
கால்களால்
வேடிக்கை பார்த்துவிட்டு
மீளவும்
நித்திரையில் புகுகிறார்கள்.
இறக்கிவிடும் போது
முதுகில் அறைகிறது
படாரென்று மூடிக்கொள்ளும்
நித்திரைத் தெருவின் வாசற்கதவு.
ஓடு ஓடெனத் துரத்த
கருணையற்று ஒளிரும்
ஆரஞ்சு சிக்னலை நோக்கி
கை நீட்டுகிறது குழந்தை.
Valthukkal sago…👏