- ஆட்டம்
அன்று நரிமுகத்தில்
விழித்திருந்தேன்
அன்றைய பயிற்சியில்
தென்னையிலிருந்து வீழும்
தேங்காய் போல
கீழே வந்த பந்தை
மூக்குக்குச் சேதாரமின்றி
பிடித்துவிட்டேன்
அணியின் சுவராக
ஆடிக் கொண்டிருந்த போது
அணித்தலைவர் உள்நுழைந்தார்
உத்தரவு பறந்தது உடனடியாக:
‘அடிச்சி ஆடுங்க, இல்ல
அவுட்டாகிப் போயிருங்க’
அடுத்த ஐந்தாவது பந்தில்
ஆட்டமிழந்தேன்
ஆளில்லா சிற்றூரில்
நொடிப்பொழுதில் கடக்கும்
விரைவு வண்டியாக
நிதானமாக ஆடுபவர்கள்
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்க
தடதடத்துக் கடக்கிறது
ஆட்டமும் அசுரவேகத்தில்
- ஒரு தோற்றுப்போன விற்பனைப் பிரதிநிதியின் வாக்குமூலம்
காலையில் கலவிமுடித்து
கதவைத் திறந்தவன்
அறைந்து சாத்தினான்
எதையும் வாங்காமல்
அவமானத்தை டீயுடன் விழுங்கிப்
பின்னர் அடுத்த கதவு
கைகள் நடுநடுங்க
பெட்டி திறக்காமல்
‘என்ன சார் பெட்டி திறக்கலயா?’
திறக்காமலேயே மூடிய மற்றொரு விற்பனை
எத்தனை காப்பிகள்
கேட்டது பிடிக்காது வந்தவர்
முகம் சுருங்க
உள்வாங்கிய காகிதம் வெளிவராமல்
முடிந்தது மற்றொன்று
கேள்விக்குப் பதில் மௌனமாய் நின்றதற்கு
கட்டபொம்மனின் சிரிப்பைத்
தண்டனையாய் வழங்கி
உள்ளேயே கொன்று போட்டார்
வெளிநாட்டு மேலாளர்
இணையர் சொல்வதுபோல்
எனக்குத்தான் எதையும்
விற்கத் தெரியவில்லை
விலைகொடுத்து வாங்கி
இலவசப்பிரசாதமாக
விநியோகிக்கும்
கவிதைத் தொகுப்பையும் சேர்த்து
- மின்விசிறி
சூரியனும் கண்ணயரும்
பின் மதியவேளை
ஆயிரம் ஊசிகளுடன்
அறையெங்கும் வெக்கை
உடலெங்கும் வேர்வை மழை
தடதடக்கும் தண்டவாளமாய்
உள்ளறையில் ஓசையுடன் மின்விசிறி
நெருங்கிய கொலுசொலியில்
விதிர்விதிர்த்து எழுந்து பார்த்து
பக்கத்தில் மகளைக்கண்டு
அசடு வழிய சிரித்து
தலைகுனிந்து வெளிவந்தவனுக்கு
கடைசி வரை
நிமிர்ந்து பார்க்கத் தைரியமில்லை
பெரியம்மா மகள்
கூடத்தில் தொங்கிய
மின்விசிறியை மட்டும்