- மயக்கம்
உனக்காக கவிதைகள் எழுதும் போது
காற்றாக வந்து காகிதங்களைப்
பறக்க விடுகிறாய்
அப்போதும் கூட
காகிதங்கள் பறந்து விட்டதை எண்ணிக்
கவலைப்படுபவன் நான் இல்லை
கவிதைகளுக்குச்
சிறகு முளைத்ததை எண்ணி
மகிழ்பவன்
எத்தனை முறை பறந்தாலும் நான்
காகிதங்களுக்கு மேல் எடை வைப்பதில்லை
கிளை விட்டு கிளை
அணில் தாவினாலும்
பறப்பதைப் போன்றதொரு மயக்கம்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
உண்மையில் மயங்குவதில்
பிழையில்லை
உலகமே ஐம்பொருள் கலந்த மயக்கம்.
- நன்னன்
இது அகிலா அத்தையின்
கூந்தல் கதை
அவள் அளகமும்
அகல் விளக்கும் ஒன்று
இரண்டுமே
எண்ணெய்யைக் குடிக்கும்
அகல் விளக்கு
எண்ணெய்யைக் குடித்து
இருளுக்கு ஒளியை அருளும்
ஆனால் அத்தையின்
கூந்தலோ
இரவுக்கே இருளைத் தரும் கருமை
பிருஷ்டம் தாண்டி
தழையும் கூந்தலில்
அத்தை பூக்களைப்
பெரும்பாலும் சூடுவதில்லை
கூந்தலுக்கு இயற்கையிலே
மணம் உண்டு என்று
தருமி சொல்லியதைக் கேட்டு
பூக்கள் சூடுவதில்
கருமியாகவே இருந்துவிட்டாள்
எல்லோருக்கும்
அத்தை மடி தான் மெத்தை
ஆனால் எனக்கு
என் அத்தையின்
குழல் கத்தை தான் மெத்தை
எப்போதும் பாட்டி அரைத்த
சிகைக்காயைத் தான்
அத்தை சிகைக்குத் தேய்ப்பாள்
தலை துவட்டும் போது
அவள் சிகையின்
சிகைக்காய்
மணம் நுகர
நாசிக்கே எச்சில் ஊறும்
துவட்டிய பின் வீடே
சாம்பிராணி
புகை மண்டலம் ஆகும்
நுனி வெடிப்பைப் போக்க
அத்தை கூந்தலை கொஞ்சம்
வெட்டிக் கொள்வதும் உண்டு
ஆனால் அவள் கூந்தல்
வெட்ட வெட்ட வளரும்
மூங்கில் கழி போல்
விரைவில் வளர்ந்து விடும்
அவள் மாமாவிற்கு
அம்மை போட்ட போது
நேர்ந்து கொண்டேன் என்று
தீடிரென்று ஒரு நாள்
சமயபுரத்தில்
மொட்டை அடித்துக் கொண்டாள்
என்னையும் அறியாமல்
நான் கண்கள் கலங்கி நின்றேன்
அவளோ முந்தானையில்
என் கண்ணீர் முத்துக்களை
அள்ளிக் கொண்டாள்
என் மனம்
அவளைப் பலகையில் அமர்த்தி
தலையில்
தண்ணீர் தெளித்து அவளது
நன்நெடுங் கூந்தலைச் சிரைத்து
மொட்டை அடித்த நாசுவனை
போரில் தோற்ற நாட்டு
மன்னனின் மனைவியின்
கூந்தலை மழித்து
தன் யானையை இழுக்க
கயிறாகத் திரித்த
சங்க காலக் கொடுங்கோலன்
‘ நன்னனாகவே ‘ இன்றும்
கருதுகிறது.
- சாபல்யம்
ஆண் பிள்ளைகளை
மட்டுமே பெற்ற
பெண்களின் ஆதங்கம்
வித்தியாசமானது
விதவிதமாய் ஆடைகள்
அணிய வைத்து
அழகு பார்க்க
சடை பின்னி
பூ வைத்துப் பார்க்க
அங்காடி எல்லாம் தேடி
வளையல், கொலுசு,
கம்மல், பாசி என
எல்லாவற்றையும் வாங்கிப்
போட்டுப் பார்க்க
ஒரு பெண் பிள்ளை
இல்லை என்ற
அங்கலாய்ப்பு அவர்களிடம்
அதிகமாகவே இருக்கும்
குழந்தைகளாக இருக்கும் போது
அவர்கள் தங்களது
ஆண் பிள்ளைகளுக்கும் கூட
வளையல்கள் எல்லாம் போட்டு
அழகு பார்ப்பார்கள்
பின்பு பாட்டி ஒருத்தி
‘ஆண் பிள்ளைக்கு
வளையல் போட்டால்
வீரம் குறைந்து விடும்’ என்று சொல்லும் போது
வருத்தத்துடன் கழற்றி வைப்பார்கள்
பெரும்பேறான
பிள்ளைப்பேற்றிலும்
ஆசைக்கு ஒரு பெண்ணும்
ஆஸ்திக்கு ஒரு ஆணும்
அமையப் பெறுவதெல்லாம்
ஜென்ம சாபல்யம்.