அ) ஒரு அமைதியின்மை
ஒரு தாவும் மனநிலை
ஒரு ஞாபகம்
வெறியூட்டத் தொடங்கியதில்
அசைவற்றுக் கிடந்த போது,
கை முழுவதும் உடைகளை அள்ளிக் கொண்டு
உடல் வந்து நின்றது.
திடுக்கிட்டு எழுந்த போது,
வயற்புறத்து நீர்க்காணுதல் புதிதல்ல…
ஏன் திடுக்கிடுகிறாய்?
எனச் சொல்லி,
நிறைய உடைகளை பலப்பல நிறங்களில் தந்ததில்
பின்னகர்ந்து சென்றேன்.
ஆ) சென்ற இடத்தில்
அடைத்துக் கொண்டு
ஒரே களைக்கட்டலாக
போர்க்குதிரைகள் போல் சிலிர்த்துக் கொண்டு
உடல்கள் காட்சி தந்தன.
ஒவ்வொரு உடலும்
ஒரு சாகசத்துக்குத் தயாராவது போல
உடைகளை வைத்துக் கொண்டு திரிந்தன.
புரிந்து கொள்ள முடியாமல்
தனித்த போது,
என் கண்களை அழுந்த மூடி
கனவுக்குள் நுழைய
மூளை என்ற பதிவுப்புத்தகத்தைத் துணைக்கழைத்தேன்
இ) நான்
உலர வைக்க முடியாத ஒரு ஞாபகத்தில்
கனவினைத் தருவித்துக் கொண்டேன்
கனவுகளின் ஞாபகத்திற்குப் பலம் அதிகம்.
இப்பொழுது,
நினைவுகள் நிறங்களாக விரியத் தொடங்கியது.
இங்கு சரி தவறு என எதுவுமில்லை
விரிந்த நிறங்களில் எனக்கான குரல் இருந்தது
அது ஒரு ஒளிறும் நிறம்.
அதனுள், மூழ்கி எழுந்ததில்
நிலமே ஒளியாகத் தெரிந்து,
இருளும் ஒளிரத் தொடங்கியது.
ஈ) மிகச் சாந்தமான நிலையில்
நிலத்தில் என்னைக் கிடத்தினேன்
சிறிது நேரத்தில், திருவிழா கண்ட நிலமாய்
வெவ்வேறான அளவுகளில்
உடைகளை அள்ளிக் கொண்டு உடல்கள்
நிறங்களாக மாறிச் சுற்றியாடின.
கற்றை நிறங்களைக் காட்டியதில்
எதும் பிடிக்கவில்லை.
உடை என் பிரத்தியேகம்.
அளவுக்கோலில்லாத அதற்குள்
நீ பிரவேசிக்காமலிருப்பது நல்லது உடலே! என்றவுடன்
விநோதமாகப் பார்த்து,
எதையோ உதடு பிதுக்கிப் பேசியதும்
புரியவில்லை.
கத்தி எறியும் போது
எந்தக் கற்சுவர் கொண்டு தப்பிப்பது?
தப்பித்தல் அவ்வளவு எளிதல்ல
எனத் திரும்பினேன்.
(உ) இப்பொழுது உடல் பேசியது.
சொல்…
பல நிற உடையணிந்த உடல்களே அழகு எனச் சொல்
என்ற அதன் கண்களில்
எரிந்த மரத்துண்டு தெரிந்தது.
கேள் உடலே….
உடல் என்பது ஒரு விழுங்கும் பசி
அதற்கு உணவென்பது இந்த உடைதான்.
பசியாறுதல் அவரவர்க்கானது.
தவிர,
என் அம்மை
அன்றே இந்த உடையிலிருந்து
கழன்றுக் கொண்டவள்.
பார் உடலே….
“நீ காட்டும்
பல நிற உடை தரித்த உடல்களின் அழகை விட
சாம்பலைப் பூசியுள்ள கால்களே அழகென்றேன்”
நிறமற்ற நிலத்தில்
எரிந்து, புதைந்து
சாம்பல் முளை பரவத்தொடங்கியது.
மருதநில மகளே,ஆடி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் காவிரி நிலத்திற்கு நிறங்களை வாரி வழங்க வாழ்த்துக்கள். மிக அருமை
மிக அருமை