- பூமரம்
பார்த்திராத பூமியின் பக்கத்தில்
முளைத்துவிட்ட எளிய தாவரம் அது
பருவங்களைப்பற்றி விவரணை
என்றும் அதற்கு இருந்ததில்லை
மழையும் காற்றும் சற்று அதிகமாகவே
அதைச்சீண்டும்
தேவையின் பொருட்டு
அனுமதிக்கப்பட்ட அளவில்
வெய்யில் நலம் விசாரிக்கும்
பார்க்காதற்கோ
பறிக்காதற்கோ
கவலை இருப்பதாய் தெரியவில்லை
குறைந்த பட்சமாய்
அப்பூரமத்திற்கு
நீங்கள் பெயராவது வைத்திருக்கலாம்.
- தீராக்கதைகள்
எதிரெதிர் அமர்ந்து
சலிக்காமல் பேசி தீர்த்தாக வேண்டிய
கதைகள் ஏராளம் என்னில்
அந்திக்கு முன்
சென்றுவிட்டால் பரவாயில்லை
எனத்தோன்றியிருக்கும் உனக்கு
விடையளித்து விட்டால்
மீண்டுமொருமுறை
வாய்க்காமலே போகலாம்
என்ற பதட்டமின்றி கடக்கிறாய்
பேசமலேயே முடிந்துவிட்ட
கதைகள்
நீ சென்ற பின்னும் அங்கிருந்து
நகர மறுக்கின்றன
தேநீரின் எஞ்சிய சுவையில்
- ஊமைக்குழந்தை
என்னை நினைக்க மறந்த நாளில்
ஒரு நாளின் குறைந்தபட்ச அழைப்பும்
குறுஞ்செய்தியும் கூட வருவதில்லை
கண்கள் தீண்டிவிட முடியாத தூரத்தில்
அவசரங்களில் அமிழ்ந்துகொண்டாய்
நானோ
உன் புகைப்படத்தில்
உன் புன்னகையில்
உன் உயரத்தில்
உன் ஆடை நிறத்தில்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
நமக்கிடையில்
இக்காதல்
ஒரு ஊமைக்குழந்தையாய்
தேறுதலின்றி தவிக்கிறது.
மிகவும் சிறப்பான கவிதைகள்.