கிழக்கு கடற்கரை சாலையோரம்
ஓங்கி உலகளக்கும்
உத்தம அப்பார்ட்மெண்டில்
நீங்கள் குடிக்கும் குடிநீரில்
அவனது மூளையின் செல்கள் இருக்கின்றன
அவன் மரண தாகத்தில் கிடக்கிறான்
உங்கள் கழிவு நீர்கற்றும் சிஸ்ட்டத்தில்
அவனது வியர்வையின் உப்பு
படிந்திருக்கிறது
அவன் அதன் manhole cover மீது கிடக்கிறான்
அவனது மூக்கில் இருந்து
ஒழுகும் குருதி
அந்தக் கவரை செம்மை ஆக்குகிறது
ஆரோவில்லின் அழகான கோளத்தைச் சுற்றி
சேரும் மழை நீர்
அழகழகாக ஓடும் வண்ணம் வடிவமைக்க
அதைச் சுற்றி நடந்த அவனது பாதங்கள்
மழை நீரில் நனைந்து
வெளுத்துச் சிலிர்த்து
ஜில்லிட்டிருக்கின்றன
அதன் அடித்தளத்தில் நிலவும்
வெள்ளொளியின்
மென்மையோடும் தண்மையோடும்
பைக் அண்ட் பாரல் பாரில்
குடித்த படி கும்மாளமாக ஆடும்
உங்கள் காற்றின் தூய்மை காக்கும்
இயந்திரத்தில் வண்ண வேதி சிறு பந்துகளை
நிரப்பியது கண்டு மலர்ந்த
அவனது கண்கள்
கடைப்பெரும் போதையில்
சொருகிக் கிடக்கின்றன
அவன் இரவும் பகலும்
சுற்றிக்கொண்டு கற்ற செய்திச் சேனலின்
30 நிமிடத்தில் 100செய்திகளில்
அவனும் இடம்பெறக் கூடும்
“சாலையோரத்தில் 45 வயது மதிக்கத்தக்க
அடையாளம் தெரியாத ஆணின் சடலம்…”
அவன் விற்ற
அதி நவீன வேதி வினையால்
நுண்ணிய தங்க முலாம் பூசிய
புத்தரின் சிலை
25 ஆண்டுகளுக்குப் பிறகும் சிரித்துக்கொண்டு இருக்கிறது
அதே நிறத்துடன்
அதே மினுமினுப்புடன்
அதே களிப்புடன்
Art Courtesy : hifructose.com