-
நாணயம்
இருப்பவனிடமிருந்து
இல்லாதவனிடம்
இடம் பெயர்கிறது
ஒரு நாணயம்
அதன்
தலைப் பக்கம்
கொடுப்பவனின்
புண்ணியக் கணக்கில்
சேர்த்துவிடும்
கோரிக்கை
பூ பக்கம்
பசித்தவனின்
சில பருக்கைகளுக்கான
பிரார்த்தனை.
அவனுக்கும் இவனுக்குமான
தனித்தனி உலகமெனச் சுழன்று
தட்டில் வந்து வீழ்கிறது
அந்த ஒற்றை நாணயம்.
-
அந்த ஒருத்தி
பெய்யெனப் பெய்கிறது
மாமழை.
வானம்
உடைத்து நொறுக்கிய
கண்ணாடி துண்டுகள்
அதில் வீழ்ந்து வீழ்ந்து
எழுகின்றன
வெவ்வேறு முகங்கள்.
குடை மறந்த
குழந்தைகள் குறித்த
கவலையில்
ஒருத்தி.
மாடியில் உலரும்
துணிகளின் நினைவில்
ஒருத்தி.
வீட்டுச் சுவர்
விரிசல்
வருத்தத்தில்
மற்றொருத்தி.
அவரவர் வாழ்விற்குள்
அழையா விருந்தாளியாய்
வந்தமர்ந்து
கொள்ளும் மழையின்
கடைசி துளியிலும்
தென்படவே இல்லை
கவிதையொன்றில்
இமை தளர்த்தி
தூறலில் திளைத்த
அந்த ஒருத்தி மட்டும்!
Image Courtesy : behance.net