இவளின் கனவுகள்
தூரதேசத்தின் வானவில்லாய் வளைந்து
இவளின் அருகேயும்
ஒரு வானத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது
எப்போதும் அவளை
வானதி என்று கூப்பிட
நண்பிகள் பலர் உண்டு
வானதியின் பிறந்தநாள் பரிசாக
அவளின் தோட்டத்தில் அன்று
நட்சத்திரங்கள் முளைத்து விட்டன
நட்சத்திரங்களைப் பறித்து
அள்ளிக் கொண்டு வரும்
ஒரு சிறுமிக்கு
வானதி
முத்தங்களை பரிசாக வழங்குகிறாள்
பரிசுகள் நிரம்பி வழியும் அறைக்கு
இவளின் வானவில்லையும்
அழைத்துச் சென்று காட்டுகிறாள்
அறை முழுவதும்
புத்தம் புதிய புத்தகங்கள்
நிரம்பி இருக்க
அவளின் கையெழுத்துப் பிரதியை
வாங்கிக் கொண்டு
விடைபெறுகிறது வானவில்
மொழி பெயர்ப்புக்காக
அடுத்த ஆண்டு
அவளை தயார் செய்கிறது
அறையின் வெளிச்சம்
கையெட்டும் தூரத்தில்
புத்தம் புதிய வாசனையோடு
அறையில் நிரம்பியிருக்கின்றன
வானவில் விட்டுப் போன நிறங்கள்.
நன்று.நல்வாழ்த்துகள்