மாறும் பருவத்தின் வலை சிலந்தி
ஒரு குறியீட்டைப் போல் உள்நுழைகிறது
குற்ற உணர்ச்சி
உணர்வு அல்ல உணர்ச்சி
என்பதில் திடுக்கிடுகிற படி.வரிசை
மாற்றி மாற்றி மேல் ஏற்றும்
சுமைக்குள்
என் சொந்தமற்ற நான்
எனக்குச் சொந்தமற்றதை தோள் மாற்றும்
காரணத்தில்
பின்னப்படுகிறது சிலந்தி வலை
எல்லாப் பின்னலும்
எல்லாக் காரணமும்
எல்லாக் கதை சொல்லலும்
எல்லா எல்லாமும்
குவிய மறுக்கிற மையத்தின் மேல்
ஆளுக்கொரு எட்டுக்கால்
எட்டும் திசை
அடையும் இலக்கில்
பின்னிவிட்ட வலை பின்னுகிறது காரணத்தை
கதை கதையாய் காரணமாம்
அழைப்பேன்
அழாதே என்கிறாய்
ஒரு முதல் திடுக்கிடல் முடியும் முன்னே
நிகழ்ந்து விட்ட பெருவெடிப்பில்
மிச்சமின்றி தீர்ந்து கொண்டிருக்கிறது
நிகழ் தகவின் அண்டம்
அறிந்துவிட்ட அர்த்தப் பிண்டம்
அடையத் தவிர்க்கும் துயரம் கடக்க
மறுமுனையில் பதில் உண்டு
மொத்த சாத்தியம் அறியும் முன்னே
முடியும் கணக்கோடு
நீ..
அலை
கோடை சொல்லின் ரசவாதம்
நன்றாக போய்க் கொண்டிருப்பதாக
நம்பிக்கொண்டிருக்கும் போதே
பாதைகள் படியிறங்கி நடக்கத் தொடங்கிய
அப் பின் மதிய வெயில்
மறப்பதற்கில்லை
தந்துவிடாத இடம்
சொடுகிட்ட அதிகாரத்தின் மேல்
நின்றுகொள்கிறது
நீர்க்கோடுகள்
தடயங்களாவதை அறிந்துவிட்ட சுவர்க்கண்ணாடி
பிரதிபலிக்கிற
எண்ணற்ற சொல்லில் இருந்து
கைக்கொள்ள ஓர் அர்த்தம் போதும் தான்
பிம்பம் காட்டும் ரசம்
ரசமேற்றுகிற உருவத்திற்குள்
பிரதிபலிக்க காரணங்களேதும் அறிந்திருக்கவில்லை
அன்றைய நிதானம்
60 டூ 100ன் சொல் இயல்பு
நீ ஒரு சின்னஞ்சிறிய ரகசியமாக
என்னுள் தங்கிப் போ
உன் வரைபடம்
வரைந்து சோரும் வசிப்பிடத்தில்
இன்னும் தோண்ட நிலமுள்ளது
கைவிரல்கள் சுட்டிக்
காட்டும் இதயத்தை கொஞ்சம்
பத்திரப்படுத்து
லப்டப் துடிப்பல்ல
சத்தியம்
ஹார்ட் ரேட் இன்னும் விலை போக
வாய்ப்புள்ள தந்திரம்
விற்றுப் பார்
விலைப்போகா உலகம் வரிசையில்
நிற்க வைக்கிற வழக்கம்
ஓர் அரசியல்
பழகு
அவிழா என் ரகசியமாக..
அருமையான கவிதைகள் ரேவா அவர்களே..! ஆர்ப்பரிப்பது இல்லாத அமைதியான குரல், குரலுக்கும் கவிதைக்கும் ஏற்ப மெல்லிய இசை. நல்லதொரு உணர்வுச் சித்திரங்கள் தந்தது உங்கள் கவிதைகள். மேலும் மேலும் எழுதுக
மகிழ்ச்சி தோழர்..