cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 20 கவிதைகள்

மனவெளியெங்கும் நிற்கிறாய்


ல்லாயிரக் கணக்கான
ப்ளாக்களையும் அன்ப்ளாக்களையும்
விழுங்கி வாழ்வதுதானே
நம்முடைய இந்தக் கொடூர காதல்.

பசியாறி பலநாட்கள் ஆகிறதாம்
பசிக் கொடுமையில்
கொஞ்சம் சீண்டுகிறது இன்று.
இம்முறை ப்ளாக்கை நான் ஊட்டவா?
இல்லை எப்பொழுதும்போல்
நீயே ஊட்டுகிறாயா?

தேவையானபோது சேர்த்துக் கொள்ளவும்
தேவையற்றபோது நீக்கிக் கொள்ளவும்
ஏராளமான வழிமுறைகள்
இந்த நவீன உலகத்தில்.
மனிதர்களும் அதற்கேற்றாற்போல்
அதிநவீனமாய் மிளிர்கிறார்கள்.
நீ மட்டும் ஏனோ
ஆதிமனிதனைப் போல
தினமும் நல்லிரவெனும்
கல்லை எறிகிறாய்.
அது என் உள்பெட்டியில் உரசுவதால்
ஒவ்வொரு இரவும்
வெளிச்சம் பூசிக்கொள்கிறது!

ன் இருப்பினை உறுதி செய்வதே
உன் வேலையாகும்போது
என் இல்லாமையில் நிலைகொள்வதே
என் வேலையாகின்றது.

இருவருக்குமிடையே
வேலையேயில்லாத கொழுத்துப் பெருத்த
அகங்காரம் பிடித்த சிலந்தியொன்று
தயக்க நூலிலையைப் பிடித்து
ஊஞ்சலாடுகின்றது!

நானில்லா உலகில்
என்ன நடந்துவிடக்கூடும்?
ஐந்தறிவுள்ள என் பூனையும் நாயும்
ஓரிரு தினங்கள்
நானின்றி வாடிக் கிடக்கக்கூடும்.
பிறகெல்லாம்
சில உணவைச் சுவைக்கும்போதும்
சில நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கும்போதும்
சில பாடலைக் கேட்கும்போதும்
சில இடங்களுக்குச் செல்லும்போதும்
என் புகைப்படத்தைப் பார்க்கும்போதும்
வெகுசிலருக்கே
என் நினைவின் பம்பரம் சுழலக்கூடும்!

எல்லாவற்றுக்கும் அப்பால்
தோராயமாகயில்லை
உறுதியாகச் சொல்கிறேன்.
எவரோ ஒருவர் மட்டும்

என்னுடைய புலனத்தின்
கடைசி வருகையின் நேரத்தோடு
அதிர்வற்றுக் கிடக்கக்கூடும்.
பச்சை நிறத்திலோடும் டைப்பிங்
ஓடாதாவென ஏங்கிக் கிடக்கக்கூடும்.
இதுவே இயலாதபோது…
காலிங், ரிங்கிங்கெல்லாம்
எப்படி சாத்தியமென்ற விரக்தியிலேயே
ஆணியற்ற பம்பரமாகக்கூடும்!

சிங்கிள் டிக் தரும் குறுஞ்செய்திகள்
மண்டைக்குள் புகுந்து
மூளைவரை சென்று
எதை எதையோ தோண்டி எடுக்கின்றன.
மனம் மட்டும் பேரமைதியோடு உறங்குகின்றது
நீ உறங்குவதைப்போல.

மணிபொறியொலிக்குக் காத்திருப்பது
உன் செவிகள் மட்டுமல்ல
என் விழிகளும்தான்!


Image Courtesy : Sunilkumar

கவிதைகள் வாசித்த குரல்:
தேன்மொழி அசோக்
Listen On Spotify :

About the author

தேன்மொழி அசோக்

தேன்மொழி அசோக்

தேன்மொழி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு,மக்கள் மனம்,மின்கிறுக்கல் மின்னிதழ் மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும்,தமிழ் நாட்டின் வாசகசாலை இணைய இதழ் மற்றும் வளரி மாத இதழிலும் வெளியாகியிருக்கின்றன.கவிதைகளை வாசித்துக் குரல் பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சிங்கப்பூரின் ஒலி 96.8ல் இவரது கவிதை வாசிப்பு ஒலித்திருக்கிறது. சிங்கப்பூரின் தங்கமுனைப் போட்டியில் (2023) இவரின் கவிதைகள் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது.

இவரது கவிதை வாசிப்பினைக் கேட்க https://youtube.com/@user-mv9zg9ry6u .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website