1.
அதீத பசியின் போது
பசியின் அதீதத் தன்மையை ருசிக்க பழகிக் கொள்ளவேண்டும்.
அல்லது
தனிமையின் கனவுகளை இறுக அனைத்துக் கொள்ளவேண்டும்.
எதுவும் கிடைக்காத போதில்
வெறுங்கையை அகமும் புறமுமாக நக்கிக் கொள்வதில்
அலாதியான இன்பம் இருக்கிறது.
2.
ஒரு புகழ்பெற்ற
அல்லது
ஒரு மோசமான எந்த ஓவியத்திலிருந்தும்
நீங்கள் விரும்பாத வண்ணங்களை
நீக்கிவிட முடியாது.
அல்லது
டாலியின் ஓவியங்கள் டாலினுடையதாகவே
அறியப்படுவதைப் போல.
வான்காவின் ஓவியங்களில் மஞ்சளை பிரித்தறிய முடிவதில்லை.
3.
உரையாடலின் இடையில்
மூன்றாவது நபர்
என்றொரு அருவமான சொல் வெளிவந்தது.
உண்மையில்
அந்த மூன்றாவது நபர் குறித்த எவ்வித குறிப்புகளும்
எங்களிடம் இல்லை.
தொலைவில் கடந்து சென்றவர்
மூன்றாவது நபரின்
சாயலாகவோ
அல்லது அரூப நிழலாகவோ
அல்லது
மூன்றாவது நபராகவோ இருக்கலாம்.