நிலமிறங்கிய கால்கள்
இரவல் விளக்கொளியில்
நெஞ்சம் நிறைய கனவுகளோடும்
வயிறு நிறைய பசியோடும்
மருத்துவக் கனவுகளுடன்
படித்துக் கொண்டிருந்தான்.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு
காலியான நெஞ்சுடனும்
நிறைந்த வயிறோடும்
எஞ்சியிருக்கிறது
ஒரு வாழ்க்கை.
ஈமம்
தனித்து விடப்பட்ட
இப்பகற்பொழுதில்
இரண்டாம் முறையாக என்
ஈமச்சடங்கை எவருமறியாவண்ணம்
வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறேன்.
வருடந்தோறும் இந்நாளில்
மீண்டுமொருமுறை இறக்கிறேன்.
நினைவுச்சவுக்கின் விளாரில்
அடியாழத்தில் ஒளிந்து அமிழ்ந்திருக்கும் ரணம்
புதுப்பிக்கபடுகிற இந்நாளில்
அறிந்தே நடந்த தற்கொலைப் பாதையின்
திருப்பங்களை மீண்டுமொருமுறை கடக்கிறேன்.
சடங்கின் ஒவ்வொரு நிகழ்வையும்
மிகுந்த பொறுமையுடன், சிரத்தையெடுத்துச் செய்கிறேன்.
எரிவதும், எரிப்பதும்
நடப்பதத்தனையும் பார்ப்பதும்
நானாகவே இருக்கிறேன்.
மீதமின்றி எரிந்தடங்கிய பின்
கண நேர மௌனத்திற்குப் பிறகு
நிகழ் யதார்த்தத்திற்குள் திரும்புகிறேன்.
நீங்களென்னை புனிதனென்றால்
ஆம்! எனக்கொரு இறந்த காலமுண்டு.
பாவியென்றால்
அதுவும் சரியே…
எனக்கோர் எதிர்காலமுண்டு.
சொல்லால் செய்த சுமைகல்
நிர்கதியாய் தவித்துக் கிடக்கிற நிசியில்
கதவுகளை அகலத் திறந்து வைத்து
காத்திருக்கிறது ஒரு கவிதை.
சிநேகமாய் புன்னகைத்து
பாரத்தை இறக்கி
கொஞ்சம் இளைப்பாறேன்
சொல்லால் செய்த சுமைகல் வழி
ஆதரவாய் கவியின் குரல்
ஒரு கரத்தில் கவிஞனையும்
மறு கரத்தில் வாசகனையும்
இறுகப் பற்றி
தட்டாமாலை சுற்றுகிறது கவிதை
அந்நாளினதான அயற்சி முற்றாக உதிர்கையில்
கவிதை யாரை ஆற்றுப்படுத்தியதெனத் தெரியாமலேயே
உறங்கச் செல்கிறான் கவி.
நித்திரையின் உலைகளத்தில்
திரள்கிறது இன்னொரு படிமம்.
நினைவின் திசைகாட்டி
வங்கியிலிருந்து வந்த
முக்கியக் கடிதம் எங்கே?
சின்னத் தம்பியின் புதிய எழுதுகோல்
எங்கே இருக்கிறது?
நாளை இந்த பொருளை மறக்காமல்
உடனெடுத்துச் செல்ல வேண்டுமே!
எங்கு வைப்பது?
வினாக்கள் பல …
அத்தையோட படத்துக்கு பின்னால
அம்மாவோட படத்துக்கு வலப்பக்கம்
ஆச்சியோட படத்துக்கு கீழ…
இருப்பிலும் இன்மையிலும்
இல்லத்தின் நினைவூட்டி
அவளே.
Art Courtesy : wattpad.com
அற்புதமான கவிதைகள். வாய்ஸ் செம