நீங்கள் தேடப்படும்
அக்குற்றவாளி நானாகவும் இருக்கலாம்
கைதிக்கென தனி எண்ணும்
தனியறையும் தானே இருக்கும்
எத்தனை சிறையில்
எத்தனை எண்கள்
தண்டிப்பதற்கு நீங்கள் யாரெனக் கேட்டால்
உன் மேல் வழக்குப் பதிவு செய்தவர் என ஒருவர்
விசாரிக்கும் தொனியிலே சத்தம் உயர்த்தி
நான்தான் காவலர் என இன்னொருவர்
சிறைக்குள் பூட்டி வைத்துவிட்டு
கொஞ்சம் தொலைவில் சென்றபின்
கண்களைத் தேய்க்கும் பொழுது தான் தெரிந்தது
வந்து
தட்டிச் சென்றவர் சிறையதிகாரி என
வருவோர் போவோர் எல்லாம் நகைத்தும்
உதிக்கும் தண்டனைகளை என்மீது
உதிர்த்தும் செல்கிறார்கள்
அப்படி என்ன குற்றம் செய்தேன்
கோடையில் பூத்திட்ட நிழலன் நான்
எனக்கும் வெயிலுக்கும்
அப்படியொரு இணக்கம்
இரவில் இல்லை
பட்டப்பகலில் தான் நடக்கும் எங்களின் கூடல்
பதின்பருவ விடலைகள்
ஒதுங்கிக் கொள்ள இடம் தேடினார்கள்
கூடலில் மறந்த நான் கொஞ்சமாய்
இடமளித்தேன்.
வந்து விழுந்தது இடி
என்னையே மாய்த்துக் கொண்டேன்
இப்போது நான் கருகிப்போன கரிமரம்
விசாரணை என்ற பெயரில்
விடவில்லை இன்னுமும்
என் விரல் கொண்டு செய்த பேனாவால்
எழுதப்பட்டது மரண தண்டனை
உச்சந்தலையில் முடிச்சவிழ்க்கி
என் மீதே ஏற்றப்பட்டது
பெருந்தூக்குக்கயிறு.
எதிரே நின்று சிரிக்கிறது
என் மீது தூக்கில் மாண்ட ஆத்மாக்கள்.
Art Courtesy : creativemarket.com
மிகவும் நேர்த்தியான வரிகள். அவருடைய அனுபவத்தின் பட்டவர்த்தனமாக அமைந்துள்ளது.