01.
இந்த உலகத்தில்
நாங்கள் இருவரும்
அதிர்ஷ்டசாலிகள்
ஏனென்றால் பிறப்பதற்கு
முன்பே பெயர்களுடன்
பிறந்தோம்.
நான் பறையனாகவும்.
அவள் படையாச்சியாகவும்.
02.
மின்மினிப் பூச்சிகளைப்
பற்றி கவிதை எழுத
நிறையபேர் இருக்கிறார்கள்.
மின்மினிப் பூச்சி கூட வர
மறுக்கும் காலனி தெருவில் எரியாத
மின் விளக்கைப் பற்றி
அம்பேத்கர் ஆகிய நான்
எழுதாமல் வேறு யார் எழுதுவார்.
03. காதலின் பிழை நாம்!
அன்பே
உன் மௌனத்தால்;
என் இதயத்தின் வலியை
உணர்கிறேன்..
நீ அசைவற்று
நிற்கையில்;
என் வலியின் ஆழத்தை
அறிகிறேன்..
அன்பால்
நிறைந்த கூட்டத்தில்
நீ மூச்சு விடும் சிரமத்தைவிட;
உன் அருகில் என்
மூச்சை விட பெரும்
சிரமப்படுகிறேன்..
உன்னிடத்தில்
எங்கேயோ தொலைத்த
என்னை;
உன் நிழலில்
தேடுகிறேன்..
ஒரு நொடியேனும்
நீ சிரித்திருக்கலாம்;
என் இதயத்தின்
வலியைக் குறைக்க..
ஒரு நொடியேனும்
நீ அசைந்திருக்கலாம்;
என் வலியின் ஆழத்தை உடைக்க..
ஒரு நொடியேனும்
அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறி
உன் மூச்சை வெளியே தள்ளியிருக்கலாம்;
உன் அருகில் நான் சுதந்திரமாக
மூச்சை விடுவதற்கு..
ஒரு நொடியேனும்
உன்னிடத்தில் தொலைத்த என்னை;
பத்திரமாக என்னிடமே
கொடுத்திருக்கலாம்
என்
தேடுதலுக்குத் துணையாக..
அன்பே,
இறுதியாக ஒரு வேண்டுகோள்!
தயவு கூர்ந்து
உன் கவிதைகளில்
எனை கொன்றுவிடு; அஃது
என் வாழ்வின் முடிவாய் இருந்துவிடு!
04. அவள் தேவதை இல்லை பிசாசு.
ஏதோ ஒரு தவிப்பில் இருக்கிறேன்
முன்பு போல் கவிதைகள் எழுத முடியவில்லை
ஆறுதலுக்கு யாராவது மடியைத் தேடுகிறேன்
கல்யாணியை நான் இழந்துவிட்டேன் என்பதை விடத்
தொலைத்துவிட்டேன் என்பதே உண்மை.
இழப்பதை விடத்
தொலைப்பதே வலி அதிகம்.
அவளுக்காகக் கடிதங்களும் எழுதப் பிடிக்கவில்லை.
கனவில் அவ்வப்போது வருவாள்,
மடியில் படுக்க வைப்பாள்,
மென்மையான கரங்கள் கொண்டு கண்ணீரைத் துடைப்பாள்,
ஆறுதலுக்காகக் கவிதைகள் சொல்வாள்,
உறங்கவைத்துப் பறந்து விடுவாள்.
முன்பெல்லாம்
நிர்வாணமாக
வருவாள்.
இப்போதெல்லாம்
பிண அறையில் போர்த்திய
துணியுடன் அழகாக வருகிறாள்.
கழுத்தை உடைத்து மடியில்
படுக்க வைக்கிறாள்.
போர் வாள் கொண்ட
கூர்மையான கத்தியால்
மென்மையான கரங்கள் கொண்டு
உடைந்த கழுத்தை அறுக்கிறாள்,
ஆறுதலுக்கு சில பகுதிகளை
வெட்டாமல் பாவம்
பார்த்து விடுகிறாள்.
வெள்ளை நிறத்தோடு வந்த
தேவதை ரத்த நிறத்தோடு சென்றது.
அவளை நான் தொலைத்த பிறகு
எனது அறையில்
ஆணுறையும் இல்லை
பூவும் இல்லை.
குறைந்தபட்சம்
சுய இன்பத்தினோடு
கழிக்கிறேன்.
இப்போது
மிஞ்சி இருப்பதோ
வற்றாத கண்ணீரும்.
ஆறாத காயமும்.
அழியாத நினைவும்.
தீராத வலியும்.
வலி நிறைந்த வாழ்வும்..
அண்ணன் அவர்களின் கவிதை சிறப்பு
சிறப்பான கவிதைகள் ..🙌🙌.உங்கள் எழுத்து பணி நிச்சயம் வெற்றி பெறும் வாழ்த்துகள்💐💐💐
Nice machan
ரௌதிரம் பழகிய வரிகளில் நெருப்பு!!!