அதொரு ஊர்ந்துசெல்லும் காலம்,
எந்த உயிர்களுக்கும்
கால்களின்னும்
முளைத்திருக்கவில்லை
நீரற்ற வெளியைப் பார்த்ததேயில்லை
காற்றசைவிற்கும் புழங்கியதில்லை
நீரின் வெளிப்புறத்தை
முதன் முதலில்
எட்டிப் பார்க்கிறது
ஒரு மீன்
கரை நெடுகிலும்
ஊமச்சிகள் ஊர்ந்துசென்ற
பாதைகள்.
***
ஊமச்சிகள் நிறைந்த
ஏரிக்கரையில் பிறந்தவன் நான்,
நீரை மழையில் மட்டுமே சந்திக்கும்
வறண்ட நிலம் நாங்கள் அதன் மேகங்கள்
நிலையில்லா ஒன்றின் மீதே
நின்றிருக்கின்றன
ஊமச்சிகளெங்கள் பசி
ஊமச்சிகளெங்கள் உணவு
ஒவ்வொரு நாளின் இரவில்
ஊர்ந்து செல்கின்றன
ஒரு நிலவு போன்ற
ஊமச்சிகளும்,
ஊமச்சிகள் போன்ற
ஒரு நிலவும்,
ஒளியில் தொலைகின்ற ஒளிதான்
நிலவென்பாள் அம்மா,
மழை நாட்கள் தேடச் சென்றிருக்கிறாள்
அவள் வருகின்ற வரை
ஊமச்சிகளின் கரையில் நானும்
ஓர் ஊமச்சியாகக்
காத்திருக்கின்றேன்.
***
அந்திமக் கிளையில்
கனிகள் முதிர்ந்து விழுகின்றன
அது ஒரு காலத்தின் பசி,
நூற்றாண்டு பசியின் சுமைகளை
மாமிசத்தை எரிக்காமலுண்ணும் ஆதிவேட்டைக்காரி
கைகள் தளும்பத் தந்துவிட்டு மறைந்தாள்
பசியின் இடம்பெயர்தலும்
ஒரு பசி போலவே
நிகழுமென்பாள் பாட்டி,
நேற்றைய அந்தி
பாட்டியின் பசி சுமந்திருக்கும்
ஊமச்சியைக் காண
நேர்ந்தது
அதே கண்கள்
***
வறண்ட நிலத்தின் புழுதிகளுக்கு
வெயிலின் சுவாசம்
அங்கு நீர் தேங்குவதில்லை
வா அன்பே…
நீர் தேங்கியிருக்கும்
பள்ளங்களுக்குச் செல்வோம்
முந்தானை நிறைய
ஊமச்சிகள் பொறுக்கி கொட்டுகிறேன்
அதிலிருந்து உனக்கொரு மூக்குத்தி வேண்டும்
அது நம் நினைவுகளின் சுருள்.
***
அலைகள் அலைகளாக
ஏரிகள் எழுதுகின்றன
ஒரு வரி எழுத ஒரு வரி அழிகிறது
ஓர் அலைக்கும் இன்னுமோர் அலைக்கும்
இடையில் விழுகின்ற சொற்களில்
தூண்டில் முள் கோர்க்கும்
சிறுமி கேட்டாள்
”ஆமா, இங்கிருந்த ஊமச்சி லா
எங்க போச்சி?”