cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 கவிதைகள்

மு.ஆறுமுக விக்னேஷ் கவிதைகள்


1. திருஷ்டி கழித்தல்

என் கண்ணே பட்டுவிடும் என்று
குழந்தையின் முகத்தை தன் கைகளால் ஆராதித்து
தலையின் பக்கவாட்டுகளில்
கைகளைக் கொண்டு சென்று
நெட்டி முறிக்கிறாள் அம்மா

நெட்டி முறித்து விட்டு
தன் வலது கண்ணின் கீழ் இமையில்
தீட்டிய அஞ்சனத்தை
வலது கையின்
நடுவிரலால் எடுத்து கன்னங்கள், நெற்றி, தாடை
என முகத்தில் ஒரு இடம் விடாமல்
குழந்தைக்குத் திருஷ்டிப் பொட்டும் இடுகிறாள்

அவளது உதிரம் குழந்தைக்கு
ஊட்டும் பாலாவதைப் போல
அஞ்சனம் திருஷ்டிப் பொட்டாகிறது.


2. குமைச்சல்:

சுருட்டுப் புகைப்பிடிக்கும்
மீசைகளுக்குக் குறைவில்லை
சாம்பிராணிப் புகைப்பிடிக்கும்
கூந்தல்கள் தான் அருகி விட்டன

குளித்து முடிந்து நீர்வார் குழலோடு
வரும் ஆதிரைக்குச்
சாம்பிராணிப் புகை போட
பாரதி கண்டெடுத்த
அக்கினிக் குஞ்சைப் போல
தீக்கங்குகளைக் கண்டெடுத்து
வைத்திருப்பாள் பாட்டி

கூந்தலின் ஈரம்
பிடரியில் வழியும் முன்பே
தனக்கு முன்பாக
ஆதிரையை உட்கார வைத்து
கூந்தலைத் தூக்கிப் பிடித்து
கடவுளுக்குத் தூபம்
காட்டுவதைப் போலத் தான்
கூந்தலுக்குச் சாம்பிராணி போடுவாள் பாட்டி

எவளுக்கு இருக்கிறது?
முட்டியைத் தொடும் அளவிற்கு
இவ்வளவு முடி என்று பாட்டிக்கு
ஆதிரையின் கூந்தல் மீது
அவ்வளவு கர்வம்

வேலை நிமித்தமாக
இப்போது முடியைப்
பிடரி வரை
வெட்டிக் கொண்ட ஆதிரை
ஏற்றி வைக்கும்
கம்ப்யூட்டர் சாம்பிராணி
நறுமணமாய் புகையவில்லை
பாட்டியின் வருத்தமாய் குமைகிறது.


3. அம்மாச்சிக்கிழவி

வளர்த்த இரு காதுகளிலும்
பாம்படம் அல்லது தண்டட்டி
வலப்பக்கம் இடப்பக்கம் என
மூக்கின் இரு பக்கமும் மூக்குத்தி
ஆதரவின் ஊற்றுக்கண்ணாய் ஊன்றுகோல்
இப்படித்தான் வலம் வருவாள்
அம்மாச்சிக்கிழவி

கிழவி என்ற கிளவியும்
தமிழைப் போலவே
வழமையானது கூடவே பழமையானது

பல் போயும் சொல் போகாத
அவளது பொக்கவாய்ச் சிரிப்பிலேயே
கண்டு கொள்ளலாம்
முதுமையின் குழந்தைமையை

ஊருக்கே ஒத்தாசையாக இருக்கும்
அம்மாச்சிக்கிழவி எப்போதும்
தன் தெருப்புற வீட்டுத் திண்ணையில்
குந்த மாட்டாள்
திண்ணை என்பதே
அக்கம் பக்கத்துச் சந்து வீட்டார்களும்
வழிப்போக்கர்களும் குந்திக் கொள்ளவே
என்பது அவளது அபிப்பிராயம்

பொழுதனைக்கும் தெருவின்
வேறு வேறு திண்ணைகளில்
உட்கார்ந்து ஊர்க் கதை பேசும்
அம்மாச்சிக்கிழவி
வெயிலோடு கருவேலங்காட்டில்
விளையாடி தாளில் முள் குத்தி வரும்
சிறுவர்களின் முள்ளை எடுப்பாள்.

கள்ளிப்பால் பீய்ச்சி
தன் கழுத்துக் கருகமணியில்
மாட்டி இருக்கும் ஊக்கை வைத்து
வலியின்றி அவள் முள்ளெடுக்கும் லாவகம்
வேறு யாருக்கும் வாய்க்காது

சரம் சரமாய் பூ வைத்து
பேன் வெடித்துப் போன
பருவக் குமரிகளின் கூந்தலில்
பேன் எடுக்கும் பொறுப்பும்
அவளுக்கு உண்டு

ஞாயிறு தோறும் அவள் முன்
தலைவிரித்து உட்கார்ந்து விடுவார்கள்
பருவக் குமரிகள்
ஈர்வளையையும் பேன் சீப்பையும்
அவள் அளவிற்கு அணுக்க நுணுக்கமாய்
கையாள்பவர்கள் யாரும் இல்லை

ஒளி பொருந்திய கண்களால்
பேன்களைக் கண்டடைந்து
தன் கை உகிர்களால் அவள் பேன் குத்துவது
குரங்கு குட்டிகளுக்கு மந்தி
பேன் பார்க்கும் சாயல்

அவள் பருவக் குமரிகளின் கூந்தலின்
நுனிவெடிப்பைக் போக்கப்
பக்குவமாகக் கத்தரியும் போடுவாள்

திண்ணைகள் இல்லாத நகரங்களை
நரகங்கள் என்று சொல்லும்
அம்மாச்சிக்கிழவி
மாநகரங்களை என்ன சொல்லுவாள்?
மாநரகங்கள் என்று சொன்னாலும் சொல்லுவாள்.


Art Courtesy : Rajkumar Sthabathy

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website