cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


பாய்மரம் திறக்கும் நீரோட்டம்

தீயின் நுனி சுருள் மெழுகென உடற் சரிவில் நழுவி
மனம் திரட்டி மௌனம் உருள நீலம் கசிகிறது
ஒரு காமம்

கனவுத் திரி இருள் நாவு தீண்டிட
குளிர் துளியைப் பற்றிக்கொண்டு எரிகிறது
உயிர் பிரிய

மீச்சிறு தருணத்தை விரல் நெருட இழுக்கிறாய்
கோடிழுத்து உள்ளங்கை ரேகையில் புது ஊர் தேடித் தொலைவதாக
பொய் சொல்லி

தலைக்கு மேல் பறக்கும் காற்றின் நறுமணச் சிறகு
அள்ளிக்கொள்வதாக தந்துபோன வாக்குறுதியின் கடைசி பக்கம்
உச்சரித்து அழைக்கிறது
யாவும் தந்திரமென

ஆனால்
மயங்கும் தணலில் மிதக்கும் ஆசைகளை வெப்பம் மூட்டிட
நெருங்குகிறாய் ஆலிங்கன மையல் சூடிய
அசைவுகள் திரள

மோகம் ஒரு தீவு
காமம் ஒரு பாய்மரம்
இழுத்துக் கட்டிப் பொழிய வேண்டிய இசை பெய்கிறது
உப்பு பூக்கும் உடல்களாக
நம்மை தாகம் தீர்க்கும் கடல்களாக


இருந்துகொண்டே.. 

இன்னும் கூட கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம் என்கிற
ஒப்பந்தத்தை
மீறுவதற்கான காரணங்கள் நம் கையில் உள்ளன

வாழ்ந்து கடந்து வந்ததை மீண்டும் புரட்டிப் பார்ப்பதற்குரிய
ஆல்பம் ஒன்று
சேஃப்டி லாக்கரில் பத்திரமாக இருக்கிறது

குத்திக் கிழித்து சுட்டிக் காட்டுவதற்கு தருணம் வரும்போது
அதன் பாஸ்வோர்டை யாருக்கோ
தந்து உதவிட அவசியமும் வரலாம்

அதுவரையில் கூட கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம் என்கிற
ஒப்பந்தத்தை
ரெனிவல் செய்துகொள்ளுவதற்கான
நோட்டரி கையெழுத்தையும் நீல நிற முத்திரையையும்
யாராவது ஒருவர் பரிந்துரை செய்திடத்தானே வேண்டும்

காத்திருப்பின் கசப்பு ருசி
அடித்தொண்டையில் சுருக்கெழுத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கும்
சத்தியங்களை துப்பிவிடுவதா
அப்படியே முழுங்கிவிடுவதா

கொஞ்சம் தண்ணீர் இருந்தால் கொடுங்கள்
இப்போதைக்கு
தாகத்தை மட்டுமாவது ஒத்தி வைத்தாக வேண்டும்


அவைகளோடு..

போதவில்லை என்றபடி
அறையின் இன்னுமொரு கதவை அடைத்தேன்

மேற்கு ஜன்னலைத் திறந்தேன் வடக்கு ஜன்னலை அடைத்தேன்
மேஜையின் இழுப்பறையை மூடினேன்
பீரோவின் கதவைத் திறந்து வைத்தேன்

சமையலறைக் கதவை மூடிவைத்து
ரெஃப்ரிஜரேட்டரின் கதவைத் திறந்து வைத்தேன்

தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரைப் பட்டைகளை
டப்பாவில் அடைத்து வைத்தேன்

தூக்கத்தை துரத்தும் இசையைத் திறந்து வைத்தேன்
புத்தகத்தை மூடினேன்

மூடிய கதவின் முன்னே தொங்கும் திரைச்சீலையைத் திறந்தேன்
உடைகளைத் திறந்தேன் உடலைத் திறந்தேன்

மொபைலை அணைத்தேன்
செவிகளை அடைத்தேன்
சொற்களை மூடினேன் வரிகளைத் திறந்தேன்

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரை
திருப்பி வைத்தேன்

நொடி முள்ளைக் கழற்றியெறிந்துவிட்டு
கடிகாரத்தின் சின்ன முள்ளை நகர்த்தி
பெரிய முள்ளின் பின்னே ஒளித்து வைத்தேன்

போதவில்லை
இந்தத் தனிமை போதவில்லை

ஏதோ ஒரு காரணம் வந்து
அவசரமாகக் காலிங் பெல்லை அழுத்துவதற்கு முன்னால்
த்ரீ ஃபேஸ் மின்சாரத்தின் லிவர்களை கீழிறக்குகிறேன்

அப்போது

மேஜை முன்னே கவிழ்ந்து கிடக்கும் நாற்காலியை
பொறுமையாக எனக்காக நிமிர்த்தி வைக்கிறது
வழி தவறிய
ஒரு
சிறு தனிமை


புறவழிகள் காத்திருக்கின்றன

நம் இருவருக்கும் நடுவே இப்போதும் உள்ளது
ஒரு மேஜை
ஓர் அறை
ஒரு கட்டிடம்
ஒரு தெரு
ஓர் ஊர்
ஒரு நகரம்

நம் இருவருக்கும் நடுவே எப்போதும் இருந்திருக்கலாம்
கொஞ்சம் சொற்கள்
கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் உண்மை
கொஞ்சம் விலகல்
கொஞ்சம் தவிப்பு
கொஞ்சம் பற்று

நம் இருவருக்கும் அப்பால் முதலிலிருந்தே இருந்தன
பகிர்ந்துகொள்ள முடியாத பொய்கள்
பகிர்ந்துகொள்ள முடியாத அவசரங்கள்
பகிர்ந்துகொள்ள முடியாத முட்டாள்தனங்கள்
பகிர்ந்துகொள்ள முடியாத சம்பவங்கள்
பகிர்ந்துகொள்ள முடியாத அர்த்தங்கள்
பகிர்ந்துகொள்ள முடியாத காத்திருப்புகள்

பிறகு

இருப்பதற்கும்
இருந்ததற்கும்
இருந்திருக்கலாம்களுக்கும் நடுவே
இருந்துகொண்டே இருக்கிறோம்
இனியும் இருப்போம் என்பதாகவோ
இல்லாமல் போவதற்காகவோ


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Veni

Super 😍👍

You cannot copy content of this Website