- ரேகை
பயோமெட்ரிக் வருகைக்குப் பின்
கையெழுத்து
போட தெரிந்தவர்களும்
கைநாட்டு தான்
ரேகை
விழவில்லை என்றால்
ரேஷனில் பொருட்கள் கிடையாது
வரிசையில்
வெகுநேரம் நின்று
கடைசியில்
பரமனுக்கு ரேகை விழவில்லை
தண்ணீரைக்
குடித்து விட்டு
மீண்டும் வரிசையில்
நிற்க சொல்லி
அறிவுறுத்துகிறார் ஆபிஸர்
“எந்தத் தண்ணீ என்று
நல்லா கேட்டுகிட்டயா?” என்று பரமனிடம்
கேலி பேசுகின்றனர்
வரிசையில் நிற்கும்
ஏனைய குடிமகன்கள்.
- சேகரம்
உடைக்க மனமின்றி
கிடப்பில் கிடக்கிறது
நீ கொடுத்து
ஐந்து ரூபாய் நாணயங்களால்
நிரப்பிய மண் உண்டியல்
கல்லை உளி வைத்து காயப்படுத்தினால் தான்
சிற்பமாக்க முடியும்
மண் அப்படியல்ல
சிறுபிள்ளைக்கு அமுதூட்ட
சோற்றைப் பிசைவது போல் பிசைந்தாலே
வேண்டிய வடிவம் வாய்க்கும்
எதையும்
காயப்படுத்தாமல்
கிடைப்பது மட்டும் தானே
காதலின் பரிசிலாக
இருக்க முடியும்
பச்சையமே
இல்லையென்றால்
பைத்தியமே
முத்துப்பல் அல்ல
எத்துப்பல் தான்
கருநாக ஜடை அல்ல
எலிவால் ஜடை தான்
ஒச்சமே
அழகின் உச்சமாய்
மாறிவிடுவது
உன்னிடம் மட்டும் தான்
உன்மொத்தமும் உன்மத்தமே.
- நினைவுச் சுருள்கள்
என் தாய்க்கு
என் கூந்தலும்
ஒரு பிள்ளை
என் கூந்தலை
பேன் இன்றி
பேணிக் காக்க
அவள் பட்ட
பிரம்ம பிரயத்தனங்களுக்கு
அளவே இல்லை
தாயின் விரல்கள்
பேன் எடுக்க
கூந்தலில் நகர்ந்திடும்
அனுபவம் சொல்ல
வார்த்தைகள் இல்லை
ஈர்வளையால் அவள்
ஈர்களுக்கு வலையிடுவாள்
பேன் சீப்பால்
பேன்களைத் தூக்கிலிடுவாள்
வெள்ளிக்கிழமையானால்
வெள்ளிச்சிணுக்கோலிக்கு
வந்துவிடும் வேலை
சிக்கெடுத்து கூந்தலை
காய வைப்பதிலேயே
செலவாகிவிடும்
காலை வேளை
வருடம் தோறும்
கோடை விடுமுறை நாட்களில் வரும்
பங்குனிப் பொங்கலில்
அதிகமாய் கூந்தல் வளர
அம்மாவும் நானும்
அம்மனுக்குப்
பூ முடி காணிக்கை
கொடுப்பது வாடிக்கை
விடுமுறை முடியும் போது
முதுகு வரை
பூ முடிக்கு வெட்டிய ஜடை
மீண்டும் இடையைத் தொடுவது
தான் வேடிக்கை
அன்று பிருஷ்டம் தாண்டி
கருமணலாய் தொங்கிய ஜடை
இப்போது எலிவால் ஆனது
இவையெல்லாம் இன்று
தலை வாரும் போது
சீப்பில் சுருளாக உதிர்ந்த
முடிகளைக் கண்டு
என் மனதில் ஓடிய
நினைவுச் சுருள்கள்.
Courtesy : Digital Painting -behance.net