1.
புரியாத கணக்குகளைக்
கூட்டிக் கழித்துக்கொண்ட இருக்கும்
பிரிவின் இறுதி எட்டிய பின்னரே
அண்மையின் அணுக்கம் புரியவரும்
ஊசல் மனமது
சில நூறுமுறை கண்ட வதைகளுக்கு
ஓரிரு முறையாவது மருந்தைப் பூசியிருக்கிறார்கள்
முகமும் குரலும் ஏன்
பெயரும்கூட தேவையில்லை
தங்கள் நிறுத்தம் என தோதான
ஓர் இடத்தில் இறங்கிக்கொண்டவர்களுக்கு
பெயரோ குரலோ ஏன் முகமோ இன்றி
ஒரு ஜீவித்திருக்கும் மூலிகையைக்
கையளித்திடவே விரும்புகிறேன்
இன்னும் சிலருக்கு
முடிவுறாப் பயணத்தின் ஊடாக
உன் எழுத்துகளுக்கு
குரல் கொடுப்பவர்கள் மத்தியில்தான்
உன் குரலுக்கு வரிவடிவம்
தேடி அலைகிறேன்
என்றாவது அதைப் பாத்தியம் செய்துவிட்டால்
போதும்
தூரிகை தொடமுடியாத உயரத்தில்
கோட்டோவியமாய் அலங்கரிப்பேன்
நம் வீட்டின் ஒவ்வொரு சுவரிலும்.
கவிதைகள் வாசித்த குரல்:
இளம்மதி
Listen On Spotify :