நதியின் தினவு கொண்ட
ஒரு பெருவனத்தின்
ஆதிக் குறிப்புக்குள்
விரிந்த அகல்வானத்தின்
சூட்சம விதிப்படி
ஓரைகளில் விழிதிறந்த குங்குமம்
முதல் முத்த இரகசியத்தை
நிறைகிளை உடலின்
பச்சைத் தவழலில் படரச்செய்கிறது.
படரும் குமிழ்களாய் நெருங்கிய
அவ்வுடலின் நெளிந்த ஸ்பரிசம்
நிழலெனத் தன்னை அலங்கரித்து
நிலத்தோடு கூடி
முயங்கிய சிணுங்கல்களாய்
விதையின் பருவத்துள் ஆட்படுகிறது…
- உடன்படவென ஒரு பொழுது இருந்தது
மல்லிகை மலர்ந்த கணத்தில்
குயில்கள் கூடு திரும்பிய மகிழ்வில் ,
மேற்கு சூரியனின் சௌகரிய நிறத்தில் ,
அவிழ் கூந்தல் வருடும் தென்றலில்,
பருவம் தனக்கென ரூபித்த ஒளியில் ,
உன்னுடன் உடன்படவென
ஒரு பொழுது இருந்தது
மேகத்திரள் திரண்டு தன்னைப் பச்சையத்தில் கிளர்த்த,
தேனின் பூந்துகள் சூலுறப் பருவத்தில்,
மோனம் கொண்ட ஆராதனையில்
சிலையின் கரு வண்ணம் தாகத்துளிகளாகி மினுமினுக்க,
நதியோடிய குறிஞ்சியில் திணையின் கிழக்கு முகம் சிணுங்க,
நாற்றங்கால் ஆழத்தில் அகலப்
புன்னகைக்கும் நீலத்தின் நிறைவில் ,
உன்னுடன் உடன்படவென
ஒரு பொழுது இருந்தது!
வெட்கம் தனக்கென உருவம் கொண்ட
நெருக்கத் தோரணையில் ,
ஓவியம் தன்னை நிறங்களில் நிர்வாணமாக்கிய முழுமையில்,
சுவாசங்கள் சமன்பட்ட எல்லிருளில்,
பிணைந்து கிடந்த நினைவின் நறுநாற்றத்தில்,
உன்னுடன் உடன்பட ஒரு பொழுது இருந்தது தானே நியந்தா!!!