1.குருவியின் விருந்தினர்கள்
என் வாழ்விடத்தின் ஆன்மா உன் நினைவுகள்.
உன்னிடம் கசியும் வாசம்
என்னவென்று
தேட
முயற்சி செய்யாமல் அனுபவிக்க மட்டும் தெரிந்த
என் மனம்
அறிவிலிருந்து விடுதலை பெற்று விட்டது
என்று
இப்போது நம்புவாயா?
ஒரு வேலை அதுதான்
ஆன்மீகத்தின் திறவு கோலா?
இன்னும் என்னவெல்லாம்
கற்றுகுடுக்க போகிறாய்!!
என் கைகளுக்குள் இருக்கும்
உன் முகத்தை
ஏந்தும் தோறும்,
ஒரு குளுமை தரும் சுடரை கைகளில் உணர்கிறேன்.
மூர்க்கம் கொள்ளாதே,
உன் கைகளில்
சிறு பூவென நானும்,
சூடிக்கொள்
காதிலோ
கழுத்திலோ
தலையிலோ.
உன் நெற்றியில் நான் பத்திக்கும்
முத்தங்களின் கதகதப்பில்
துளிர் விடுகிறது
உன் ஆன்மாவின் பேரருவி.
அதில் ஒளிக்கீற்றென
நம்மை மறந்த நொடிகள்.
வந்து விடு இவை அனைத்தும்
வார்த்தைகள் கொண்ட மேடு பள்ளங்கள்.
நிம்மதியாகத் தலை சாய்க்கவிடாத பிசாசுகள்.
சீக்கிரம் வா!!
என் கைகளைப் பற்றிக்கொள்,
வழியை ஒரு
குருவியிடம் கேட்போம்.
பதில் புரியவில்லை
என்றால்
கூட்டிலேயே
வசிப்போம்.
2. துகள்
எல்லாவற்றிற்கும் காரணம் ஆனால்
இந்த விதை
எங்கே போயிருக்கும்?
அப்படி மண்ணாக
மாறியிருந்தால்
எத்தனை
துகள்களாகியிருக்கும்?
“நான் விதையாக தானிருந்தவன்
ஆனால் இப்போது உங்களை போலே வெறும் துகள்தான்”
என்றதும்
மிச்சம் இருந்த அத்தனை
துகள்களும்
“உயிர் வாழ்ந்த
துகள் என்று சொல்”
என்றது.
அத்தனை துகள்களும்
கடற்கரை
சிறுமி கட்டிய
மண் வீட்டின்
நுழைவாயிலாகக்
கோபுரமாக
உள்ளே
குளுமை
அனுபவித்த
விருந்தாளியாக
இருந்தனர்.
3. மௌனத்தின் வரைபடம்.
மௌனத்தின் வரைபடத்தைத் தேடினேன்.
சில துணுக்குக்கள் சிந்தனை பொறியில்.
மௌனச் சிந்தனை எனலாமா?
ஆனால்
மௌனமோ சிந்தனையின் எதிர்நிலை !!
சோர்வுடன் அமர்ந்தேன்.
ஒரு தேடல்,
மீண்டும் சிந்தனை பிடியில்.
சோர்வு.
மூன்று மாத குழந்தை,
என் காத்திருப்பு அறையில்.
“என்ன பண்ணுது குழந்தைக்கு” என்றேன்.
தாயின் பதில் காதில் விழவில்லை.
ஆட்கொள்ளப்பட்டேன்
குழந்தையின்
பெருங்கருணை கண்களில்.
மௌனத்தின் வரைபடம்.