cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

மகேஷ் கவிதைகள்

மகேஷ்
Written by மகேஷ்

  • துளியின் வலிமை!

வலிமையான
ஆகிருதியின் தோற்றத்தில்
வியாபித்திருந்த
முள்வேலியோரம்
ஓடிக்கிடக்கிறது
ஒரு தினம்!

முதுகுகள் உரசிக்கொண்ட
சிவந்து விரிந்த
விழி முறைப்புகளினூடே
தடதடக்கிறது
ஒரு பயணம்!

திடகாத்திரங்களின் மத்தியில்
மெலிந்து நைந்திருக்கும்
நோய்வாய்ப்பட்ட உணர்வுகளுக்கு
ஊட்டச்சத்து ஏற்றுதல்
தொடரும்!

குடைசாய்ந்த
கனவுகளைச்செப்பனிடுதலின்
தொடர்புப்பணிகள்
ஆமையாய் நகரும்!

கலையாது அழகாய்
சலவை செய்து
மடித்துவைக்கப்பட்ட
நினைவுத்துணிகளை
மன யானையொன்று
துவம்சம் செய்து
கலைத்து வீசும்!

குப்பைகளை
சுருட்டி எறிந்த பின்பும்
மிச்சமிருக்கும்
துருவேறிய நினைவுகள்
ஒன்றிரண்டிலிருந்து
வெளிப்படும்
சிறு துளியொன்று
மாமலையை
சாய்த்துப்போடும்!

  • கோபமெனும் தீ!

அவசியம் ஏதுமின்றி
பொங்கிப்பெருகிய
ரணகளங்களின்
ரகளை தொடர்ந்து
வன்முறையோ வரலாம்
என
ஊடுருவ எத்தனித்தலில்
எல்லை கடந்து
வெடித்த
பெரும் எரிமலைகளின்
உஷ்ணங்களில்
ஏதும் பயனில்லை!

ஆணவத்தால் வந்த
ஆக்ரோஷமோ ஏதோ
படபடக்கும் தருணங்களில்
நிலை கொள்ளாது
தவிக்கும்
எதிர்
சமநிலை இதயம்
இருந்தும் திசை படர்ந்த
கனல்களில்
தீ பறந்து
கொழுந்து விட்டெரியும்

சீற்ற அலைகளின்
வீச்சுக்கு உட்பட்ட
விவரணைகளில்
பொறி பறக்கும்!

சர்ச்சைகளோடே
அடங்காது அலையும்
ஆக்கமில்லா
கோபக்கணைகள்
வீணே
ஆட்கொண்ட
அப்பொழுதுகளில்
பழமையோ புதுமையோ
ஏதும் பெருமையில்லை!
………..

 

About the author

மகேஷ்

மகேஷ்

சென்னையை சேர்ந்த மகேஷ் மத்திய அரசு ஊழியராக உள்ளார். சிறு வயது முதலே கவிதைகள் எழுதி வருவதாக தெரிவிக்கும் இவரின் கவிதைகள் பல்வேறு இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website